சீரமைப்போம் தமிழகத்த என்ற ஸ்லோகத்துடன் மக்கள் நீதி மய்ய கட்சியின் கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சந்தோஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமிலா நாசர், கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை முதல் மதியம் வரை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிற்பகலில் கட்சியின் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, வக்கீல் அணி என பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்று சார்பு அணியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டார்.

மேலும், இந்த கூட்டத்தில், கட்சி தொடங்கி 4ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, வருகிற 21ஆம் தேதி சென்னை வண்டலூரில் நடத்த உள்ள மாநாடு குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. அப்போது, இந்த மாநாடு தேர்தல் நேரத்தில் வருகிறது. இதனை சிறப்பாக நடத்தி மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியதாக தெரிகிறது.

மாநாட்டுக்கு நிதி வழங்குவோர் நிதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மாநாட்டிற்கு ரூ.1 கோடி வசூலாகி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் யோக்கியமான கட்சிகள் கிடையாது. 2 கட்சிகளும் தமிழகத்தின் நலன் சார்ந்த கட்சிகள் அல்ல. அதனால் தான் நாம் ‘சீரமைப்போம் தமிழகத்த’ என்ற கோஷத்தை முன்னெடுத்து புதிய கட்சி தொடங்கி இருக்கிறோம். 2 கட்சிகளுக்கும் மாற்றாக நாம் தமிழகத்தில் வலிமை பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஊழல் கட்சிகள் தான். ஊழல் செய்யும் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைப்பது இல்லை. ஊழல் செய்பவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்திலும் இடம் கிடையாது. ஊழல் செய்யும் எண்ணம் யாருக்கேனும் இருந்தால், இப்போதே திருமண மண்டப கதவுகள் திறந்து இருக்கிறது வெளியேறி விடலாம்.

மக்கள் நீதி மய்யத்தின் குடும்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்கள், இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேருங்கள். அவர்கள் தான் அடுத்த தலைவர்கள். எனது மகள்கள் 2 பேரும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வரவேண்டும் என்று கூறினார்கள். ஆனால், வாரிசு அரசியலுக்கு நமது கட்சியில் இடம் கிடையாது என்பதால் வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். கட்சியினர் தான் என் உயிர். நாம் மாபெரும் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here