ஜோ பைடன் தீவிர முயற்சி
வாஷிங்டன்:
ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஆட்சி பொறுப்பேற்றார். இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 42 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து உள்ளது என தற்போது அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வைரஸ் தாக்கத்துக்கு பலியாகி உள்ள நிலையில் உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றது. அதிபராகப் பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் குறித்த திட்டங்களை ஜோ பைடன் செயல்படுத்தத் துவங்கினார்.
வைரஸ் தாக்கத்தால் கடந்தாண்டு வேலை இழந்த நடுத்தரவர்க்க அமெரிக்கர்களுக்கு அரசு உதவித்தொகை அளிப்பதற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஜோ பைடன் கோரிக்கை வைத்தார். இந்த மாபெரும் மசோதா வேலை இழந்த அமெரிக்கர்கள் பலருக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என அவர் நம்பினார்.
இதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து செய்யவேண்டிய திட்டங்கள் அவர் முன் சவால்களாக ஒன்று திரண்டன. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்திற்கு பயணிக்கும்போது சமூக விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து செல்ல ஜோ பைடன் தொடர்ந்து குடிமக்களை வலியுறுத்தி வந்தார்.
