பங்கேற்ற 103 பேருக்கு கொரோனா
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், தலைநகர் பெங்களூருவில் தினமும் 200-க்கும் அதிகமாக பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு பன்னரகட்டா சாலை பிலேகஹள்ளியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இதில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது 36 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்தது.