வீட்டுக்குள் வளர்க்க வேண்டிய மூன்று செடிகள்!

எப்போதும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கக் கூடாது. நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்க அவ்வப்போது வெளியே நடமாட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், நகரமயமாக்கல் காரணமாக சாலையில் உள்ள தூசு, கட்டுமான தூசு, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை காரணமாக வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது.

இதை எதிர்கொள்ள வீட்டுக்குள்ளே செடி வளர்க்கலாம். செடி பொதுவாக பகலில் பச்சையம் எனப்படும் செயல் காரணமாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இரவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது. எனவே, அழகாக இருக்கிறது என்று எல்லா செடிகளையும் வீட்டுக்குள் வைத்துவிட முடியாது. அதுவே பிரச்னையாக முடிந்துவிடலாம்.

வீட்டுக்குள் அழகுக்காக ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant), ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant), பீஸ் லில்லி (Peace lilly) என்ற அழகுச் செடிகளை வளர்க்கலாம். இவை ஆக்சிஜனை வழங்குவதுடன், வீட்டுக்குள் உள்ள தூசுக்களை உறிஞ்சும் ஆற்றல் உண்டு.

ஸ்பைடர் பிளாண்ட்:

ஸ்பைடர் பிளாண்ட் மிக வேகமாக வளரக் கூடிய அழகு தாவரம் ஆகும். இது காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைட், ட்ரைக்ளோரெத்திலீன் (டி.சி.இ), சைலீன் ,  டோலுயீன் உள்ளிட்டவற்றை ஈர்த்து தூயக் காற்றை அளிக்கும். இதை மருத்துவமனைகள், நோயாளிகள் உள்ள அறையில் வளர்த்து வந்தால் நோயாளிகள் மிக விரைவாக குணம் பெறுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பீஸ் லில்லி:

பீஸ் லில்லி செடி பார்க்க அழகாக இருக்கும். அதே நேரத்தில் தலைவலி, சுவாசப் பிரச்னைக்கு காரணமான காற்றில் கலந்திருக்கும் அமோனியா, பென்சைன் உள்ளிட்ட பல நச்சுக்களை ஈர்த்து சுத்தமான காற்றை அளிக்கும் திறன் இதற்கு உண்டு. ஆஸ்துமா அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் இதை வீட்டில் வளர்க்கலாம். இவை ஆஸ்துமா, அலர்ஜிக்கு காரணமான நுண் துகள்களை ஈர்த்து தூய காற்றை அளிக்கும்.

ஸ்நேக் பிளாண்ட்:

ஸ்நேக் பிளாண்டிலும் இந்த ரசாயனங்களை ஈர்த்து தூய காற்றை அளிக்கும் தன்மை உள்ளது. அதே நேரத்தில் இவை வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றன. உடலில் வலி உள்ள இடத்தில் இந்த செடியின் இலையைக் கசக்கி வைத்தால் வலி குறையும். இது சாப்பிடக் கூடிய செடி இல்லை.

வீடுகளில் மூலிகை குணம் கொண்ட கற்பூரவல்லி, துளசி, தூதுவளை, நொச்சி, வெந்தயம், புதினா, அஸ்வகந்தா போன்றவற்றை வளர்க்கலாம். இவை எல்லாம் காற்றில் உள்ள நச்சுக்களை ஈர்த்து நல்ல காற்றை நமக்குத் தரும். மேலும், கை மருத்துவத்துக்கும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here