எஸ்ஓபி விதிமுறைகளைப் பின்பற்றாத 15 கட்டுமானத் தளங்களுக்கு வேலை முடக்க உத்தரவு

ஜனவரி 13ஆம் தேதி முதல் அமலிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாமல் இயங்கிய 15 கட்டுமானத் தளங்களை மூட மலேசியக் கட்டுமானத் தொழில் துறை மேம்பாட்டு வாரியம் (சி.ஐ.டி.பி.) உத்தரவு பிறப்பித்துள்ளதாகப் பொதுப்பணித் துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி ஃபடில்லா ஹாஜி யூசோப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடெங்கிலும் உள்ள 1,078 கட்டுமானத் தளங்களில் 1,022 தளங்களில் இன்னமும் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அவற்றில் 1,007 தளங்கள் எஸ்.ஓ.பி. விதிமுறைகளுக்குட்பட்டு இயங்குகின்றன. சிஐடிபி மேற்கொண்ட பரிசோதனையின்போது மீதமுள்ள 15 தளங்கள்  முறைப்படி எஸ்.ஓ.பி. விதிமுறைகளைப் பின்பற்றாதது கண்டறியப்பட்டது. ஆதலால், குறிப்பிட்ட அத்தளங்களுக்கு சிஐடிபி வேலை முடக்க உத்தரவைப் பிறப்பித்தது என்று அவர் கூறினார்.

விதிக்கப்படுகின்ற எஸ்.ஓ.பி. விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்படுவதால்தான் பெரும்பாலான கட்டுமானத் தளங்களில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறுகிய மற்றும் சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பது, ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு வேலைக் காரணமாக மாற்றலாகிச் செல்வது, தூர இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் கோவிட்-19 தொற்று இன்னும் அதிகளவில் பரவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இக்காலகட்டத்தில் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதி பெறும் குத்தகையாளர்கள், எஸ்.ஓ.பி. விதிமுறைகளுக்குட்பட்டு தங்கள் தளங்களில் பணிகள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை மீறினால் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வேலை முடக்கத்திற்கான உத்தரவும் பிறப்பிக்கப்படுமென தமதறிக்கையின் வாயிலாக ஃபடில்லா அறிவுறுத்தினார்.

எஸ்.ஓ.பி. குறித்த மேல் விவரங்களுக்கு www.cidb.gov.my/ms/pkp-kebenaran-beroperasi எனும் சிஐடிபி அகப்பக்கதையோ எனும் https://t.me/cidbmy டெலிகிராம் பக்கத்தையோ வலம் வரலாம். அல்லது 03-55673300 எனும் எண்கள் மூலமாக சிஐடிபியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here