ஜெர்மனியைத் தலைமையகமாகக் கொண்ட பிரபல கண் (ஆப்டிக்கல்) சென்சார் தயாரிப்பு நிறுவனமான லியூஸே, தென்கிழக்கு ஆசியாவில் தன்னுடைய முதலாவது உற்பத்தி தொழிற்சாலையை மலேசியாவில் அமைக்க உள்ளது.
உலகத் தரத்திலான இந்த ஆப்டிக்கல் சென்சார் தயாரிப்பாளர்கள் 2021, ஜனவரி மாதம் மெய்நிகர் வழி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை அறிவித்தனர்.
அத்தொழிற்சாலையின் நிர்மாணிப்புப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. திறப்பு விழா பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று மலேசியாவில் லியூஸே கட்டுமானத் திட்டத்தின் நிர்வாகியும் குளோபல் புரோஜெக்ட் ஆப்பரேஷன் இயக்குநருமான செபஸ்தியன் ரைய்பல் தெரிவித்தார்.
மலாக்காவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்நிறுவனம் ஆசியாவின் கவர்ச்சிகரமான சந்தைக்கு ஆப்டிக்கல் சென்சார்கள் உற்பத்தி செய்யும் 17,000 சதுர மீட்டர் அளவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இத்தொழிற்சாலை 2022 முதல் காலாண்டில் முழுமைப் பெறும் என்று அவர் கூறினார்.
புதிய லியூஸே தொழிற்சாலை 150 முதல் 200 தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களைக் கொண்டிருப்பதற்கு இலக்கு வகுத்துள்ளது என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜோசென் விம்மர் கூறினார்.
தன்னுடைய வணிக விரிவாக்கத்திற்கு மலேசியாவைத் தேர்ந்தெடுத்திருக்கும் லியூஸேவை மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (மைடா) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்மான் மாஹ்முட் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவின் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையை இம்முடிவு பிரதிபலிக்கிறது. 2018ஆம் ஆண்டு மைடா வழி மலேசிய அரசாங்கம் லியூஸேவுடன் அதன் முதல் சந்திப்பை நடத்தியது.
அதன் பின்னர் அந்நிறுவனம் மலேசியாவில் தடம் பதிப்பதற்குத் தேவையான லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பெற்றுத் தருவதில் லியூஸே நிறுவனத்திற்கு மைடா பெரும் உறுதுணையாக இருந்தது என்று டத்தோ அஸ்மான் குறிப்பிட்டார்.