சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா

-அணிவதற்குத் தடை – மக்கள் ஆதரவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக வைக்கப்பட்டது. பெண்கள் முழுமையாக முகத்தை மூடுவது என்பது பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் செயல் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் புர்காவை தடை செய்யும் நோக்கில் இந்த யோசனை முன் வைக்கப்பட்டது.

சில ஐரோப்பிய (Europe) நாடுகளில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புர்கா மீதான தடையை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில், மக்கள் மனநிலையை அறிய அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுமார் ஓர் ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த பொது வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஆடைகள் அணிவதைத் தடை செய்யவேண்டும் என்பதை ஆதரித்து, 51.2 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக சுவிஸ் அரசு, குறைந்த அளவிலான பெண்கள் தான் புர்கா அணிகின்றனர் என்றும், அப்படி அணிபவர்களில் பெரும்பாலானோர் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சுற்றூலா பயணிகள் என்றும் கூறி, புர்கா மீதான தடை நடவடிக்கையை எதிர்த்தது. இந்தத் தடை சுற்றுலாவை பாதிக்கும் என கூறி அதனை முன்னதாக ஆதரிக்கவில்லை

சுமார் 85 லட்சம் மக்கள் வாழும் இந்த ஐரோப்பிய நாட்டில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சில பெண்கள் முழுமையான புர்கா அணிந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புர்கா மீதான தடைக்கு ஆதரவாக பொது மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பொது இடங்களில் புர்கா அணிவதை சட்ட விரோதம் என வகை செய்யும் வகையிலான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு இயற்றும் எனக் கூறப்படுகிறது.

எனினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உடல் நலன் காரணத்திற்காக மாஸ்க் அணிதல் போன்றவற்றிற்கு தளர்வுகள் அளித்து, விரிவான சட்டம் ஒன்றை தயாரிக்க யோசனை கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here