தொப்புள் கொடியாக இணைவோம்

 

கண்ணான கண்மணிகளே!
அனைவருக்கும் அன்பு வணக்கம். நீங்கள் யாவரும் நலம் தானே!

தமிழ்ப்பள்ளிகளின் முத்துக்களாக, பவளங்களாக, வைரங்களாக ஜொலிக்கின்ற கண்மணிகளை மக்கள் ஓசையின்  பள்ளிகள் தோறும் இன்பத் தமிழ் முழக்கம் சிறப்புப் பக்கத்தின் வழி  சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

இன்று 2021, மார்ச் 15ஆம் நாள் திங்கிட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் பக்கம் பூக்கத்தொடங்கியிருக்கிறது.

ஒரு தகவல் களஞ்சியமாகவும் அறிவுப் பசிக்குத் தீனி போடும் செய்திக் களமாகவும் இச்சிறப்புப் பக்கம் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு உங்களை நாடி வரவிருக்கிறது.

மக்கள் ஓசை நாளிதழையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் இணைக்கும் தொப்புள் கொடியாக இச்சிறப்புப் பக்கம் விளங்கும்.

நானும் அடிக்கடி உங்களோடு பேசுவேன். நீங்களும் என்னோடு பேசலாம்… எழுத்து வடிவில்! எப்படி என்பதை அடுத்தடுத்த மடல்களில் உங்களுக்குத் தெரிவிப்பேன்.

நாம் நிறைய பேசப் போகிறோம். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; பகிர்ந்துகொள்ளப் போகிறோம்.

நம்மோடு அண்ணன் எஸ். வெங்கடேஷ், அக்காள் மார்கள் திவ்வியா ராமகிருஷ்ணன், கயல்விழி இளங்கோவன் ஆகியோரும் வலம் வருவர்.

சில நல்ல உள்ளங்களின் ஆதரவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகளுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு இலவசமாக மக்கள் ஓசை மாணவர்கள் வாசித்து மகிழ – பயன்பெற வந்து சேரும்.

அடுத்தடுத்த வாரங்களில் நாடு முழுமையிலும் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் மாணவர்கள் மக்கள் ஓசை இன்பத் தமிழை பருகுவர்.

தமிழ், மலாய், ஆங்கிலம், அறிவியல், குட்டிக்கதைகள், திருக்குறள் விளக்கம், சிந்தனையைக் கிளறும் விளையாட்டுப் போட்டிகள், கருத்தாழமிக்க அறிஞர்களின் படைப்புகள், ஆசிரியர் பெருந்தகைகளின் படைப்போவியங்கள் கண்டிப்பாக உங்களை மகிழ்வித்து அறிவுக்கு ஒளியூட்டும்.

எங்களுக்கு வாய்ப்பு இல்லையா என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்பது என் காதுகளில் வந்து விழுந்துவிட்டதே!

கண்மணிகளே, உங்களுக்கு இல்லாத வாய்ப்பா? இது உங்கள் பக்கம் – உங்கள் ராஜ்ஜியம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த மடலில் சொல்கிறேன். அதுவரை காத்திருப்பதில் உங்களுக்கு சங்கடம் இல்லையே!

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் -மக்கள் ஓசை நாளிதழை வாங்கி வீட்டில் உள்ள உங்கள் பிள்ளைகளுக்குத் தாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here