திருப்பத்தூர் அருகே பழுதான மின்மாற்றியை பழுது பார்த்த விவசாயிகள்

திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றியை விவசாயிகளே சொந்த பணம் செலவழித்து சீரமைத்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மொளகாரம்பட்டி கிராமத்தில் விவசாயப்பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளுக்காக மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இப்பகுதியில் தனியாக மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. மின் இணைப்பு இல்லாததால் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

இது தொடர்பாக கொரட்டி துணை மின்வாரிய அலுவலகத் தில் புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

மின்வாரிய அதிகாரிகள் பழுதான மின்மாற்றியை சீரமைக்க முன்வராததால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த பணத்தை செலவழித்து பழுதான மின்மாற்றியை கடந்த வாரம் சீரமைத்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு சீரமைக்கப்பட்ட மின்மாற்றியும் அடுத்த சில மணி நேரத்தில் பழுதடைந்ததாக தெரிகிறது.

இதனால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வழியில்லாமல் விவசாயிகள் தவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ” கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மின்மாற்றியை ரூ.15 ஆயிரம் செலவழித்து பழுது பார்த்தோம். ஆனால், சில மணி நேரத்தில் பழுதாகி விட்டது.

கொரட்டி மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறார்கள். தற்போது, கோடைகாலம் தொடங்கி விட்டதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

மின்மாற்றி பழுதடைந்து 15 நாட்களுக்கு மேல் ஆவதால் பயிர் களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அனைத்து பயிர்களும் தற்போது வாடத்தொடங்கிவிட்டது” என்றனர்.

இது தொடர்பாக கொரட்டி துணை மின்நிலை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது ‘மின்மாற்றி பழுது குறித்த தகவல் வந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளோம். பழைய வயர்கள் இருப்பதால் லோடு தாங்காமல் பழுது ஏற்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் எமர்ஜென்சி லைன் வழங்கப்பட்டு வருகிறது. மின்மாற்றி பழுது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பழைய வயர்களை மாற்றும் பணிகள் நேற்று காலை நடந்ததால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நாளை (இன்று) நிலைமை சீரடையும். அதேநேரத்தில் பழுதான மின்மாற்றியை அப்பகுதியைச் சேர்ந்தவர்களே சொந்த செலவிலேயே சீரமைத்தார்கள் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளோம். மின்வாரியம் அனுமதியில்லாமல் மின்மாற்றியை பொதுமக்கள் எப்படி கையாண்டனர் என்பது குறித்து விளக்கம் கேட்டு வருகிறோம். மின்வாரிய லைன் மேன்களுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தோழமையாக பழகுகிறார்களா ? என்பது குறித்தும் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அப்படி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here