தவளைகள் தலைகுனிகின்றன
VOTE (ஓட்டு) என்ற ஆங்கிலச் சொல்லின் விரிவாக்கம் வரிசெலுத்துவோர்க்கு மட்டும் வாக்குரிமை. இந்நிலையை மாற்றி வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என போராடி வாங்கித் தந்தவர் இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மூலம் இந்தியாவைக் கட்டமைத்த அக்குடியரசின் தந்தை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.
அப்படிப்பட்ட மகத்துவம் மிக்க ஓட்டுரிமை தற்போது இந்தியாவிலும் சரி, மலேசியாவிலும் சரி விலை பேசப்படும் அளவுக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டது.
தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி அரசியல் விளையாட்டுகளில் சிக்கி மூச்சுத் திணறித் தவிப்பது இந்த ஓட்டுரிமை என்றால் மறுப்பார் எவரும் உண்டோ?
ஒரு நாட்டின் ஜனநாயகத் தூண்களில் முக்கியமானது ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓட்டுரிமை. அந்த ஒரு விரல் முடிவில்தான் ஒரு நாட்டின் நிலைத்தன்மையும் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படுகிறது.
ஊழலற்ற – லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு நாடே மக்களுக்குச் சிறந்தவற்றை வழங்க முடியும் என்பது கல்வெட்டாக எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிதர்சன உண்மையாகும்.
அந்த ஓட்டுகளை விலைகொடுத்து வாங்குவதற்கு அரசியல்வாதிகளும் பதவி மோகம் பிடித்தவர்களும் முன்வரும்போது அந்த ஜனநாயக உரிமையின் ஆணிவேர் ஆட்டம் காண்கிறது.
ஓட்டில் தொடங்கும் லஞ்சம் அனைத்து துறைகளிலும் கறையான் அரிப்பதுபோல் ஊடுருவி ஒரு நிர்வாகக் கட்டமைப்பையே செல்லரித்துப் போக வைக்கிறது.
மக்களின் பலம் போய் பணம் சர்வ வல்லமை பெற்று விளங்குகிறது. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வாங்கலாம். பணத்திற்காக மக்கள் பிரதிநிதிீ என்ற மரியாதையை விற்கக்கூட தயாராகிவிட்டனர் மாண்புமிகுக்கள்.
மலேசியாவிலும் இக்காட்சிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் ஓட்டுரிமை மூலம் தேர்வுசெய்யப்பட்டனர்.
வேட்பாளராக நிற்கும்போது ஒரு கட்சியில் இருந்தவர்கள், இப்போது அதே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கட்சியில் கூசாமல் சேர்ந்து வருகின்றனர்.
மக்களின் ஓட்டுரிமைக்கு மதிப்பு இல்லை என்றால், பேசாமல் பொதுத்தேர்தலை நடத்தாமலேயே வேண்டியவர்களை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தலாமே. இதனால் காலம், நேரம், கோடிக்கணக்கான பணம் மிச்சமாகலாம்.
இந்த அரசியல்வாதிகளின் தாவும் வேகத்தைக் கண்டு தவளைகளே வெட்கித் தலைகுனிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம்மால்கூட இப்படி தாவ முடியவில்லையே என்ற ங்ோகத்தில் அவை மூழ்கிக்கிடக்கின்றன.
ஆனால், ஓர் உண்மையை ஆட்சியில் உள்ளவர்கள் மறந்தே போகின்றனர்.யாருடைய கட்சி தாவலால் அரங்சாங்கம் அமைத்து ஆட்சி நடத்துகின்றார்களோ,
அதே தாவல் பேர்வழிகளால் நாளை அந்த ஆட்சியை இழக்க முடியும் என்பதுதான் அந்தப் பேருண்மை.
பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால் அவர் தாவிவிட்டார், இவர் தாவிவிட்டார் என்ற செய்திகள்தாம் மக்களின் நம்பிக்கையைச் சாகடித்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் உச்ச்பட்ச சட்ட கட்டமைப்பாக விளங்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமையின் அர்த்தம் புரியாமல் மக்கள் பிரதிநிதிகள் அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டதன் வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நாளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சி தாவியவர்கள் அவர்களின் ஆட்டத்தைக் காட்டிவிட்டனர்.
மக்கள் இன்னும் அவர்களின் ஆட்டத்தைக் காட்டவில்லை. காட்டும்போது அவர்களால் கண்டிப்பாகத் தாங்கிக்கொள்ளவே முடியாது!
– பி.ஆர். ராஜன்