எழுத்தாளன் போற்றப்படுகிறான், கவிஞன் மட்டுமே வாழ்த்தப்படுகிறான்

இன்று உலகக் கவிதைகள் தினம் என்பது வெகுவாகப் பேசப்படுகின்ற செய்தி அல்ல. ஆனாலும் பேசப்படவேண்டிய செய்தி என்பதை உலகக் கவிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.இதற்கு மறுப்பு இருக்கவே முடியாது. 

ஒரு குழ்ந்தையின் பிறப்பே கவிதை என்கின்றனர். தாய்பால் அருந்திய திளைப்பால் குழந்தை வளர்கிறது. வளரும் குழந்தையின் உடல் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதுமா? தாய்ப்பாலுடன் பண்பையும் ஊட்டினால்தானே குழந்தை அறிவுள்ள குழந்தையாக வளரும்! 

அறிவூட்டும் உயர்ந்த சாதனமாகத்தான் கவிதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கவிதைகள் அன்னையிடமிருந்து இசைவழியாக குழந்தைக்கு ஊட்டபடும்போது குழந்தை ஊட்டமாகவே கிரகித்துகொள்கிறது. 

கவிதையே பாட்டாகிறது. பாடுபொருள் என்பது கற்பனை சார்ந்தது. அன்னைக்கு பாடுபொருள்கள் தன்னைச்சுற்றியுள்ள சூழல்கள். உறவுகள்,  இதைக்கொண்டே பாடலை உருவாக்கும் இயற்கை ஆற்றல்  கிடைத்துவிடுகிறது. இது எப்படி நடக்கிறது என்பதற்கான அறிவியல் விளக்கம் இன்னும் முழுமை பெறவில்லை.

நல்ல வார்த்தைகளை வரிகளாக்குமுன் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள, மனதில் பதிய வைத்துக்கொள்ள கவிதையே வாகனமாகிறது. கவிதையாக்கிச்சொல்வது கலையாகிவிடுககிறது.

அம்மா என்று அழைக்கும் முன், குழந்தை அறியும் மொழிதான் தாலாட்டு, தாலாட்டு ஒன்றுதான் வீரம்தரும், உணர்வு தரும், பண்புதரும், உறவு தரும். ஆதலால் ஒரு குழந்தை கவிதையோடுடுதான் மண்ணை முத்தமிடுகிறது.

உலகில் கவிதைகளே முதன்மையாகி விரிந்து, பரந்துகிடக்கின்றன. பலர் இதை தேடுவதில்லை. பலர் பாடுவதில்லை. இன்னும் பலர் நாடுவதில்லை. ஆதலால் அன்னையின் பாட்டோடு கவிதை முடிந்துவிட்டதாக நினைக்கின்றவர்களுக்கு இன்று உலகக் கவிதைகள் தினமாக நினைவூட்டப்படுகிறது.

உண்மையில் கவிஞர்களுக்கு இத்தினம் அவசியமில்லாததுதான். கவிதைப் படைக்கும்  நேரமெல்லாம் கவிதைகள் நாளாக மட்டுமல்ல, கவித்துவ நேரம்தானே!

அழகான உவமையில் பொய்மை எனும் உண்மைக்கு கவிதையே விருந்தாக இருக்கிறது. கவிதை உணர்வுக்குத் தீனி. உலகில் கவிஞன் மட்டுமே அனைத்துமாகிறான். ஆதாலால் கவிதை செய்க! கவிதை செய்க! 

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here