– பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புது கட்டுப்பாடு
திருவாரூர்:
ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா கூறியுள்ளார். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே என திருநாவுக்கரசரும், தேராரூம் நெடுவீதி திருவாரூர் என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோவில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.