நரகாசுரனை வதம் செய்த நாளாகவும் ராமர் வனவாச முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாகவும் தான் தீபாவளி திகழ்கிறது. அன்றைய நாளில் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைத்தும் வெடிகளை வெடித்தும் மக்கள் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட நாளில் பெண்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மகாலட்சுமி வழிபாட்டை தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் பெண்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே திகழும். பண்டிகையில் தெய்வங்களுக்கு செய்யக்கூடிய வழிபாடாக இருந்தாலும் சரி, நெய்வேத்தியமாக இருந்தாலும் சரி அந்த குடும்பத்தை சரியாக நிர்வகிக்கக்கூடிய பெண்கள்தான் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
அந்த வகையில் தீபாவளி அன்று பெண்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் பச்சரிசியை பரப்பி அந்த பச்சரிசியில் தங்களுடைய மோதிர விரலை பயன்படுத்தி “ஸ்ரீம்” என்று எழுத வேண்டும். ஸ்ரீம் என்பது மகாலட்சுமியின் பீஜ மந்திரம்.
இந்த மந்திரத்திற்கு அதிகளவு சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மந்திரம் எழுதிய பச்சரிசியை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து ஒரு தாமரைப் பூவையும் அந்த மந்திரத்திற்கு மேல் இருப்பது போல் அதாவது ம் யில் புள்ளி வைக்கும் இடத்தில் இருப்பது போல் வைத்து விட வேண்டும்.
இந்த மந்திரத்திற்கு முன்பாக 5 புது அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு ஒவ்வொரு விளக்கிலும் ஐந்து டைமண்ட் கற்கண்டுகளை போட்டு தீபமேற்றி ஸ்ரீம் என்னும் மந்திரத்தை 108 முறை கூறி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி பெண்கள் அன்றைய தினம் செய்வதன் மூலம் மகாலட்சுமி அவர்கள் வீடு தேடி வருவதோடு அனைத்து விதமான செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார்கள்.
எளிமையான இந்த மகாலட்சுமி வழிபாட்டை முழுமனதோடு தீபாவளி அன்று பெண்கள் செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.