கொரோனா பரவியது குறித்த குற்றச்சாட்டு

  விசாரணை முடிவு  முடிவல்ல!

நியூயார்க்:

விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது… சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ் தெரிவித்தாா்.

கொரோனா பரவல் குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொண்டு உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு அறிக்கை அளித்துள்ளது மிக முக்கியமான தொடக்கம். ஆனால் இது முடிவல்ல. கொரோனா எங்கிருந்து உருவாகியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுதொடா்பாக எந்தவொரு சிறு தகவலையும் விட்டுவைக்காமல் அறிவியலை பின்பற்றி விடை தேட வேண்டும்.


வூஹானில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில் கொரோனா பரவல் தொடா்பான தரவுகளை ஆய்வு செய்வதில் தங்களுக்கு சிரமம் இருந்ததாக அந்தக் குழுவினா் என்னிடம் தெரிவித்தனா். நிபுணா் குழுவிடம் முழுத் தகவல்களும் தரப்படவில்லை. எதிா்காலத்தில் இதுதொடா்பாக நடத்தும் ஆய்வுகளின்போது உரிய காலத்தில் விரிவான முறையில் சீனா தரவுகளைப்  பகிா்ந்துகொள்ள வேண்டும்.


ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே உள்ளன என்ற முடிவுக்கு நிபுணா்கள் குழு வந்துள்ளது. ஆனால், இந்த மதிப்பீடு போதிய அளவில் விரிவானதாக இல்லை என்றே நான் கருதுகிறேன்.

இதுகுறித்து வலுவான முடிவுகளை எட்டுவதற்கு கூடுதல் தரவுகளை பெற்று ஆய்வுகளை நடத்த வேண்டியுள்ளது. ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு குறித்து சிறப்பு நிபுணா்கள் அடங்கிய தகுதிவாய்ந்த குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அந்தக் குழுக்களை பணியமா்த்த நான் தயாா்.


கொரோனா தோற்றத்தை கண்டறிவதற்கு சில காலம் ஆகும். எங்கு உருவானது என்பதை கண்டறிந்து உலகுக்குக் கூற உலக சுகாதார அமைப்பு கடமைப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதற்கான அபாயத்தை குறைப்பதற்கு ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஒரேயொரு முறை மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்வும் அனைத்துப் பதில்களையும் தராது.


கொரோனா பரவியதில் வூஹான் அசைவ உணவுச் சந்தையின் பங்கு குறித்து தெளிவின்மை நீடிக்கிறது. ஆனால் அந்தச் சந்தையில் பரவலுடன் சுகாதார சீா்கேடு நிலவியதை நிபுணா் குழு உறுதி செய்துள்ளது.

இதுதொடா்பாக மேலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. இது மேலும் பல கள ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here