இந்திய – வங்கதேச உறவு:

– ஆழ்ந்த புரிதலின் அவசியம்

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு மற்றும் ஷேக் முஜீபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியப் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றிருந்ததும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்ததும் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நட்புறவை மட்டுமின்றி, அவற்றின் எதிர்காலத் திட்டங்களையும் இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள சவால்களையும் எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

வங்கதேச உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த ஹசீனா, இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அவரது தந்தை முஜீபுர் கொல்லப்பட்ட பின்னர், அவருக்கும் அவரது குடும்பத்தினர் இந்தியா புகலிடம் அளித்ததையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் டிசம்பர் 2020-இல் நடத்திய காணொளிச் சந்திப்பிலேயே வாணிபக் கூட்டுறவுக்கான திட்டங்கள், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக்கான திட்டங்கள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியதோடு விளையாட்டு, கல்வி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டனர்.

இந்திய – வங்கதேசம் இடையிலான கடந்த 15 ஆண்டு கால உறவில் ஹசீனா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் மேலும் பல புதிய அம்சங்கள் இணைந்திருப்பதோடு, சில விஷயங்களில் நீடித்துவந்த வேறுபாடுகளும் சரிசெய்வதற்கான வாய்ப்பு உருவானது.

ஹசீனாவின் முடிவால் 2009-லிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத முகாம்கள் மூடப்பட்டதோடு, இந்தியாவில் மிகவும் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த ஏறக்குறைய இருபது பேர் ஒப்படைக்கப்பட்டனர்.

நீண்ட காலமாக முடிவுசெய்யப்படாமல் இருந்துவரும் நில எல்லை உடன்பாடு – 2015 ஐ விரைவில் இறுதிசெய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

வங்கத்தில் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், இந்தப் பயணமும் நிகழ்வுகளும் இந்தியாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உண்டான எதிர்விளைவுகளும் கூட அதைத் தெளிவுபடுத்துகின்றன.

மோடியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. ஹிபாஸத்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 11 பேர் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் இறந்திருக்கிறார்கள்.

அதற்குப் பழிவாங்கும் வகையில், இந்துச் சிறுபான்மையினரின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு பல்வேறு வகைகளில் வெற்றிகரமாக அமைந்திருந்தாலும், இந்திய – வங்கதேச உறவில் இருதரப்பிலும் உள்ள உணர்ச்சிகரமான பிரச்சினைகளைக் குறித்து ஆழ்ந்த புரிதலை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியத்தையே இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here