மதுரையில் மோடி இன்று பிரச்சாரம்

-5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

மதுரையில் பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டத்துக்கு 5 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் பிரச்சாரம் செய்கிறார்.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவே மதுரை வந்தார். பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் அவர் தங்கினார். இவரது வருகையையொட்டி விமான நிலையம், பசுமலை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட மேடையைச் சுற்றி அரை கிலோ மீட்டர் சுற்றளவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை பகுதி, பார்வையாளர்கள் அரங்கு, ஹெலிபேட் மைதானம், பொதுக்கூட்ட பந்தலுக்குள் நுழையும் பகுதி, தடுப்பு வேலி பகுதி என 5 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பு வேலி பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் தலைமையில் 2 ஐஜிக்கள், 4 டிஐஜிக்கள், 19 எஸ்பிக்கள், மதுரை நகர், புறநகர், விருதுநகர், பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் வந்துள்ள சுமார் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி வருகையை முன்னிட்டு ரிங் ரோடு சுற்றுச்சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு பணிக்காக தற்காலிகக் காவல் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படுகின்றன.

முன்னதாக பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி திரிபாதி மதுரையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கும் விடுதியில் காவல் அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here