கோலாலம்பூர்:
தலைநகரின் புடு சந்தை, ஜாலான் இயூ பகுதியில் மீண்டும் வெளிநாட்டு வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்களும் உள்ளூர் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்த போதிலும், வங்கதேசத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மீண்டும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர மளிகைப் பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்துப் பேசிய பொதுமக்களில் ஒருவரான முகமட் யூனுஸ் ஹாஷிம், இந்த சட்டவிரோத வியாபாரிகளால் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், உள்ளூர் உரிமங்களை முறைகேடாகப் பயன்படுத்தி வெளிநாட்டவர்களுக்குத் துணை நிற்கும் உள்ளூர் உரிமையாளர்கள் மீது கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அவ்வப்போது நடத்தப்படும் திடீர் சோதனைகளை விட, குடிநுழைவுத் துறையினரும், மாநகர் மன்ற அதிகாரிகளும் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு, அதிக அபராத விதிப்புகளை அமல்படுத்தினால் மட்டுமே இத்தகைய சட்டவிரோதச் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என உள்ளூர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
























