யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மியன்மாரின் பாகானில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர்.
யங்கூன்:
மியன்மார் ராணுவம் அதிகளவில் படைகளை நிறுத்தி உள்ளதாகவும் அவர்களின் தொடர் விமானத் தாக்குதல்களால் குழந்தைகள் உட்பட 12,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர நேர்ந்ததாகவும் கிளர்ச்சிக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
கேஎன்யூ எனும் கேரன் இன கிளர்ச்சிக் குழு 10 ராணுவ அதிகாரிகளைக் கொன்று கிழக்கு கெய்ன் மாநிலத்தில் உள்ள ராணுவத் தளம் ஒன்றை கைப்பற்றியது. அதற்கு ராணுவ ஆட்சிக்குழுவும் பதிலடி கொடுத்தது.
அதிகளவில் படை பலத்தைப் பயன்படுத்தி மார்ச் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தொடர் குண்டுவீச்சு மற்றும் விமானத் தாக்குதல்களில் ஈடுபட்ட மியன்மார் ராணுவத்திற்கு எதிராக கேரன் கிளர்ச்சிக் குழு நேற்று கண்டனம் தெரிவித்தது.
இந்த தாக்குதல்களில் சிறார்கள் உட்பட பலர் மாண்டனர். ஆனால், ராணுவத் தளத்தை கைப்பற்றவும் அதிகாரிகளை கொலை செய்யவும் காரணமாக இருந்த கேஎன்யூவின் 5வது படைப்பிரிவை மட்டுமே ராணுவம் குறிவைத்து வருவதாக ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சாவ் மின் துன் தெரிவித்தார்.
மேலும் ஒருநாள் மட்டுமே ராணுவப் படை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் சொன்னார்.
கடந்த திங்கட்கிழமையன்று எல்லை கிராமங்களில் வசித்த சுமார் 3,000 பேர் அடைக்கலம் தேடி தாய்லாந்திற்குள் நுழைந்ததாகவும் ஆனால் பெரும்பாலானோர் புதன்கிழமையன்று மீண்டும் மியன்மாருக்கே திரும்பியதாகவும் தாய்லாந்து கூறியது.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நேற்று நால்வர் கொல்லப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை சுமார் 46 சிறார்கள் உட்பட 550 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க சிறிய நகரங்களில் சிறு சிறு குழுக்களாக கூடுவதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், மத்திய நகரமான மோனிவாவில் பாதுகாப்புப் படையினர் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் மியன்மார் நவ் செய்தி கூறுகிறது.
இதே போல் தெற்கு நகரமான தாட்டனில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகோ வீக்லி இணையச் செய்தி தெரிவித்துள்ளது.









