(கோகி கருணாநிதி)
இஸ்கண்டார் புத்ரி:
பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த நெட்வொர்க் ஸ்கூலுடன் தொடர்புடைய ஒரு வளாகம், வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று இஸ்கண்டார் புத்ரி மாநகர் கழகத்தால் மூடப்பட்டு அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டது.
காலை சுமார் 11.30 மணியளவில் வளாகத்துக்குச் சென்ற அமலாக்க அதிகாரிகள், முதலில் வளாக மூடல் உத்தரவு அறிவிப்பை நிர்வாகத்திடம் வழங்கினர். அதன் பின்னர், சட்ட விதிமுறைகளின்படி நுழைவாயிலில் மாநகர் கழகத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற தடுப்புப் பட்டை பொருத்தப்பட்டு, வளாகம் முழுமையாக சீல் வைக்கப்பட்டது.
காலை 11.45 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் மூடல் உத்தரவு அறிவிப்பும் வளாக நுழைவாயிலில் ஒட்டப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை, இஸ்கண்டார் புத்ரி மாநகர் கழகத்தின் 2018 வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிமுறைகளின் துணைச் சட்டம் 49(2)-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பார்வையில், வளாகம் முற்றிலும் வெறிச்சோடியிருந்தது. இதற்கு முன்பு இருந்த நெட்வொர்க் ஸ்கூல் பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டிருந்தது. அதேவேளை, இந்த நடவடிக்கையை நேரில் பதிவு செய்ய பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் காலை முதலே அங்கு திரண்டிருந்தனர்.
இந்த அமலாக்க நடவடிக்கை தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையை இஸ்கண்டார் புத்ரி மாநகர் கழகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோத்தா இஸ்கண்டாரில் அமைந்துள்ள டத்தோ ஜஃபார் கட்டடத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கவுள்ளார்.
இதற்கு முன்னர், நெட்வொர்க் ஸ்கூலின் வணிக உரிமத்தை ரத்து செய்யும் தீர்மானம் இஸ்கண்டார் புத்ரி மாநகர் கழகத்தின் சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வளாக ஆய்வு அறிக்கைகள், அமலாக்க அதிகாரிகளின் விசாரணை முடிவுகள் மற்றும் நிறுவனத்தின் விளக்கங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகர் கழகம் தெரிவித்திருந்தது.
மேலும், பாரஸ்ட் சிட்டி, புலாவ் சாத்து, ஜாலான் பாரஸ்ட் சிட்டி 5, தெலுக் பிந்தாங் பகுதியில் அமைந்துள்ள P-01-11 என்ற வளாகம் செல்லுபடியாகும் வணிக உரிமம் இன்றி இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டதால், அதன் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து இன்று மூடல் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாநகர் கழகம் தெரிவித்துள்ளது.




















