ஆஸ்திரேலியாவிலுள்ள காக்பர்ன் நகரத்தின் உணவுக் கழிவுகளை, பசுமை ஆற்றலாக மாற்றுகிறது ஒரு தொழில்நுட்பம். இது மனித வயிறு இயங்கும்முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.
காக்பர்னிலுள்ள உணவகங்கள், அங்காடிகளில் சேகரிக்கப்படும் உணவு, காய்கறி கழிவுகளைச் செயற்கை செறிமான ஆலை வாங்கிக்கொள்கிறது. வந்து சேரும் கழிவுகளை கூழ் போல ஆக்கி, செறிமானத் தொட்டிகளில் போட்டால், அதிலுள்ள நுண்ணுயிரிகள் அவற்றை சிதைத்துவிடும்.
இதிலிருந்து, மீத்தேன் வாயு கிடைக்கும். மீத்தேன் மூலம் இயங்கும் இரு பெரிய, ‘ஜெனரேட்டர்’கள், உற்பத்தி செய்யும் 2.4 ‘மெகா வாட்’ மின்சாரம் ஆலைக்கும், அருகிலுள்ள மூவாயிரம் வீடுகளுக்கும் கிடைக்கிறது.
இதுவரை இந்த பரிசோதனை ஆலை 43 டன் உணவுக் கழிவுகளை கையாண்டுள்ளது. மாறாக, இந்த கழிவுகள் குப்பை மேட்டில் தேங்கியிருந்தால், சுற்றுச்சூழலில் 81 ஆயிரம் கிலோ ‘கார்பன்டையாக்சைடு’ கலந்திருக்கும். தவிர செறிமான தொட்டிகளிலிருந்து கிடைக்கும் கூழ் போன்ற திரவத்தை, ‘ரிச் க்ரோ’ நிறுவனம் விவசாயிகளுக்கு உரமாக விற்கிறது. குப்பைகளை ஆற்றலாக நுட்பங்களுக்கு தற்போது மவுசு கூடி வருகிறது.