கோலாலம்பூர்:
கடந்த மாதம் ஜாவி, தாமான் பெலிபிஸில் (Taman Belibis) நடந்த கத்திக் குத்து சம்பவத்தில், ஒருவரைக் கொலை செய்ததாகவும் அவரது மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 38 வயது ரோஹிஞ்சா ஆடவர் ஒருவர் மீது இன்று ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒஸ்மான் பாவ்டி அலாம் (Osman Bawdi Alom) என்ற குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவர், மாஜிஸ்திரேட் நூருல் ஐன்னா அகமது முன்னிலையில் வாசித்துக் காட்டப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார். எனினும், கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
முதல் குற்றச்சாட்டு, கடந்த மே 31-ஆம் தேதி மதியம் 2:50 மணி முதல் 2:54 மணிக்குள் தமன் பெலிபிஸில் உள்ள ஒரு வீட்டில், அப்துல் ரஹ்மான் ஷா மியா (வயது 31) என்ற நபரை ஒஸ்மான் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 கசையடிகளுக்குக் குறையாத தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில், அதே நேரத்தில், அதே இடத்தில் அப்துல் ரஹ்மானின் மனைவி ஃபார்மின் லால் மியா (வயது 26) என்பவரைக் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தண்டனைச் சட்டம் பிரிவு 324-இன் கீழ் (ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) கொண்டு வரப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது கசையடி, அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம். இந்த இரண்டாவது குற்றச்சாட்டிற்கு, “நான் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை” என்று ஒஸ்மான் கூறினார்.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஐரினா சியாஸ்ரீன் சைனுரின், பிரேதப் பரிசோதனை அறிக்கை, வேதியியல் மற்றும் தடயவியல் அறிக்கைகள் வரும் வரை நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரினார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளதால், அவருக்குப் பிணை வழங்கப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் ஜி. சத்யாஷ் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் முன்னிலையானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நூருல் ஐன்னா, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 7-ஆம் தேதியை நிர்ணத்தார்.
இதே நீதிமன்றத்தில், முறையான ஆவணங்கள் இன்றி மலேசியாவிற்குள் நுழைந்ததாகக் குடிநுழைவுத் துறை சட்டம் 1959/63-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுமைரா (வயது 18), மினாரா (வயது 29) ஆகிய இரு ரோஹிஞ்சா பெண்களின் மீதான குற்றச்சாட்டுப் பதிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தங்களுக்கு மலாய் மொழி (Bahasa Malaysia) புரியவில்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, மியன்மார் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்வதற்காக இந்த வழக்கு ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் ஹுமைரா என்பவர் குற்றம் சாட்டப்பட்ட ஒஸ்மானின் மனைவி ஆவார், மினாரா என்பவர் உயிரிழந்த நபரின் மைத்துனி ஆவார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொடூரக் கொலைச் சமப்வம் நடந்துள்ளதாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.





















