முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல்:

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாளை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல்- டீசல் வழங்கப்படும் என்று பெட்ரோலிய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று தற்போது படிப்படியாக மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் தினமும் 1,500 பேருக்குத் தொற்று என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்கிறது.

கரோனா தொற்றுப் பரவல் வேகம் அதிகரிக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே கரோனா தடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழகத்தில் 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை (10- ஆம் தேதி) முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்- டீசல் வழங்கப்படும் என்று தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேபோல இன்று (ஏப்.9) முகக்கவசம் அணியாமல் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பெட்ரோல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்றும் அதை அணியாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here