–சூரிய புரட்சியின் புதுமைகள்!
சூரிய ஒளி மின் பலகை தயாரிப்பில் புரட்சியை நிகழ்த்தி வருகின்றன, ‘பெரோவ்ஸ்கைட்’ என்கிற தாதுக்கள். சிலிக்கனால் பலகைகளைவிட அதிக மின்சாரத்தை பெரோவ்ஸ்கைட் பலகைகள் உற்பத்தி செய்கின்றன.
அதேசமயம், அதிக வெயிலால் நிலையற்ற தன்மையையும் அடைகின்றன. இதனால், பெரோவ்ஸ்கைட்டின் நிலையற்ற தன்மையை போக்குவது எப்படி என்று பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
அண்மையில், ஆஸ்திரேலியாவிலுள்ள, குவீன்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முடி திருத்தகத்தில் வீணாகும் தலைமுடி இதற்கு உதவலாம் என கண்டறிந்துள்ளனர்.
கமெண்ட்: வீண்வார்த்தைகளால் திட்டுக்கின்றபோது பெருந்தவறு செய்வதாக யாரும் நினைப்பதேயில்லை. வாயில் வந்தததைக் கூறிவிடுகிறோம் .பின்னர் அது வம்பாக மாறிவிடுவதும் உண்டு. அப்படி நடக்காமல் இருக்க, அந்த வார்த்தையில் அடிபடும் பொருளுக்கு உரிய மரியாதையைக் கொடுத்துவிட்டால் தவறாகப்புரிதல் எடுபடாதல்லவா! அந்த வகையில் தலைமுடிக்கும் மரியாதை கிடைத்திருக்கிறது.
முடியால் முடியும் என்று நிரூபித்திருக்கிறார்களே!
மனித தலைமுடியை 240 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வைத்தால், அது மூலக்கூறு மட்டத்தில் கார்பன் , நைட்ரஜன் பின்னிப் பிணைந்த ஒரு பொருளை தருகிறது.
நேனோ புள்ளிகள் அடர்த்தியான இந்தப் பொருளை, பெரோவ்ஸ்கைட் சூரிய பலகைகளைத் தயாரிக்க விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
தலைமுடியில் தயாரான கார்பன் நேனோ பொருள், பலகையின் மேல் கவசம் போல செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த கவசம், பெரோவ்ஸ்கைட் தாதுவை, ஈரப்பதம், வெப்பம், ஆக்சிஜன் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
வீசி எறியும் தலைமுடி, நாளைய ஆற்றல் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கப்போகிறது!