அரச மலேசிய போலீஸ் படையின் அடையாளம் காணப்பட்டிருக்கும் ஊழல், அணி (கார்ட்டெல்) விவகாரம் மிகக் கடுமையானதாகவும் எதிர்மறையான தோற்றத்தையும் தரவல்லதாக உள்ளது. அதன் உயர் ஒழுக்க நெறி கேள்விக்குறியாகிறது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ நேற்று தெரிவித்தார்.
இந்த விவகாரங்களை ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் சில வாரங்களுக்கு முன் பகிரங்கப்படுத்தி இருப்பதை அவர் தம்முடைய ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
போலீஸ் படையின் தோற்றத்திற்கே மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்று தாம் கருதுவதாக அவர் சொன்ன்னார்.
கார்ட்டெல், ஊழல் நடவடிக்கைகளில் இருந்து அரசு மலேசிய போலீஸ் படையை மீட்டெடுத்து, அதன் உயர் ஒழுக்க நெறியைப் பலப்படுத்தி, போலீஸ் படைமீது மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பிரதமர் முக்கியப் பங்காற்றி இருக்க வேண்டும்.
இவ்விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் மத்தியில் சூடான விவாதமாக மாறியிருப்பினும் பிரதமர் அவரின் நிலைப்பாட்டை இன்றளவும் அறிவிக்கவும் இல்லை, உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோபிந்த் சிங் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதுபோன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கும் வழி இல்லாமல் அவசரகாலப் பிரகடனம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது.
நாடாளுமன்றம் மட்டும் கூடியிருந்தாலும் நானும் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்விவகாரத்தை எழுப்பி இருப்போம் என்றார் அவர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் 10 கேள்விகளை முன் வைப்பதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
1. ஐஜிபி அம்பலப்படுத்தி இருப்பதுபோல் அரசு மலேசிய போலீஸ் படையில் கார்ட்டெல், ஊழல் – லஞ்ச கலாச்சாம் இருப்பது உண்மையா?
2. அம்பலப்படுத்தியிருப்பதுபோல் இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா?
3. இது உண்மை என்றால் ஊழல் விவகாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) அதிகாரத்திற்கு உட்பட்டதுதானே?
4. இவ்விவகாரத்தில் எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
5. சொல்வதுபோல் போலீஸ்காரர்களின் தவறான செயல்களை உயர் ஒழுக்க நெறி, தர நிர்ணய கண்காணிப்பு இலாகா மூடி மறைக்கிறது என்பது உண்மையா?
6. இக்கூற்று உண்மை என்றால், இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கு எப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
7. இவ்விவகாரத்தைப் புலன் விங்ாரணை ஙெ்ய்வதற்கு அரங் விங்ாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அரங்ாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
8. ஏற்கெனவே உள் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் புலன் விசாரணை எந்த அளவில் உள்ளது?
9. ஊழல் சம்பவங்கள் ஆழமாக புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா?
10. அப்படி இல்லை என்றால், இவ்விவகாரத்தை அரச மலேசிய போலீஸ் மட்டும் உள்ளுக்குள்ளேயே விசாரிக்கும் என்பது உண்மையா? இத்தகவல் உண்மை என்றால் மற்ற சம்பவங்களைக் காட்டிலும் இது எந்த வகையில் மாறுபட்டிருக்கிறது?