வரலாற்றில் இன்று…

ஏப்ரல் 22 –

பூமியைப் பற்றி சிந்திக்க ஒரு நாள்

அனைத்துலக புவி தினம் இன்று!

பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் ஏற்படுத்தி புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் உலகப் புவி நாள் (World Earth Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1969ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன், சாண்டா பார்பராவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்ட பிறகு, மனம் கொதிப்படைந்து தலைநகர் வாஷிங்டனுக்குத் திரும்பினார். அதற்குப் பிறகு ஏப்ரல் 22ஆம் தேதியை அமெரிக்காவில் தேசியச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை அவர் சமர்ப்பித்தார். அதன் பின்னர் 1970 முதல் அமெரிக்காவில் புவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவரைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் ‘எர்த் டே’ எனப்படும் புவி நாளைக் கொண்டாடுவது பற்றி அமைதிக்காகப் போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார். அவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும் பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கோநெல் கருத்துத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் 1972ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி புவி நாள் கொண்டாட்டங்கள் இன்றுவரை உலகம் முழுவதும் தொடர்கின்றன.
பூமியை மீட்டெடுப்போம் என்ற கருப்பொருளை 2021ஆம் ஆண்டுக்கான புவி தினம் வலியுறுத்துகின்றது. ஆக, இன்றைய நாள் மட்டுமல்லாது வருங்காலங்களில் நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here