–பிரதமர் வாக்குறுதி
–கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் சமமான அடைவுநிலையை உறுதிசெய்வதற்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்றுக் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று கோரப்பிடியிலிருந்து மலேசியா விட்டுவைக்கப்படவில்லை. அதன் எதிர்மறையான தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு நாடு போராடிக் கொண்டிருக்கிறது.
மக்களின் பாதுகாப்பு, அவர்களின் நலன், பொருளாதாரம் ஆகியவற்றைச் சரிசெய்யும் மிகப்பெரிய போராட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
தொழில்துறைகள் பகுதியாக மூடப்பட்ட நிலையில் மிகக்கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை அவை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களின் பணியிடங்கள் மூடப்பட்ட நிலையில் வேலைகளை இழந்தனர். வணிகர்கள் கடைகளை மூடினர். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நான் பிரதமராக இருக்கின்ற பட்சத்தில் பரிவுமிக்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவதற்கும் வேலைச் சந்தையில் மக்களை மீண்டும் கொண்டு சேர்ப்பதற்கும் முடிந்தளவு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத்துறை அமைச்சின் அமலாக்கத் தளபத்திய மையத்திற்கு நேற்று வருகைப்புரிந்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கியும் உடனிருந்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேலை, கல்வி, தொழில், வணிகம் என்று எல்லா நிலைகளும் நிலைகுத்திப்போயின.
நாம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமெனில் இயல்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை இந்தக் கொரோனா பெருந்தொற்று நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
மக்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் அளவற்றவை. இயல்பான வாணிபங்கள் இல்லை. இந்நிலையில் இன்னும் உத்வேகத்துடனும் புத்தாக்கச் சிந்தனைகளுடனும் செயல்படும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்று டான்ஸ்ரீ முஹிடின் குறிப்பிட்டார். நாட்டின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தற்போது மிகவும் சுமுகமாக நடந்து வருகிறது. அதற்கான அனைத்துத் திட்டங்களும் தங்குதடையின்றிச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2022 பிப்ரவரி மாதத்திற்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 65 லட்சம் தனிநபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனும் இலக்கை அடைவதற்குரிய அனைத்துப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.