தாய்மொழிப் பள்ளிகள் மிரட்டல் அல்ல!

மிரட்டப்படுகின்றன!

நாட்டில் தமிழ், சீனம் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையும் அல்ல; மிரட்டலும் அல்ல! ஆனால் உண்மை நிலையில் தாய்மொழிப் பள்ளிகள்தாம் மிரட்டப்படுகின்றன.

தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும், ஒற்றுமை அழிப்புக்கு இட்டுச் சென்றுவிடும் என்று சில தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

நாட்டின் கல்வி முறையில் தாய்மொழிப் பள்ளிகள் ஒரு பகுதி; அவை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தமிழ் – சீனப்பள்ளிகளில் கணிசமான எண்ணிக்கையில் சீனர், இந்தியர் அல்லாத பிள்ளைகள் படிக்கின்றனர். இது இந்தத் தாய்மொழிப் பள்ளிகளைப் பல இனக் கலப்பு கல்வி மையங்களாகத் தலைநிமிரச் செய்து வருகின்றன.

கல்விச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் இடம்பெற்றிருப்பதற்கு நாட்டின் உச்ச கட்டமாக கோலோச்சும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்திருக்கிறது.

போதனை மொழிகள்தாம் மாறுபட்டிருக்கின்றதே தவிர கல்வி – போதனை உள்ளடக்கங்கள் – பாடத்திட்டங்கள் அனைத்தையும் மலேசிய கல்வி அமைச்சுதான் வழங்குகிறது.

தமிழ் – சீன மொழிப்பள்ளிகள் அவற்றின் சொந்தக் கல்வி முறையை, பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை.

தேசிய கல்விக் கொள்கைக்கு உட்பட்டுதான் – அதற்கு ஏற்பத்தான் இத்தாய்மொழிப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், தாய்மொழிப் பள்ளிகளைத் தங்களின் அரசியல் மன அரிப்புகளுக்குத் தீனி போடுவதற்கு அரசியலாக்கி சுகம் காண்கிறது ஒரு கும்பல்.

கல்வியை அரசியலாக்கும் கும்பல்கள் உள்ள ஒரே நாடு மலேசியாவாகத்தான் இருக்க முடியும். சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட தாய்மொழிப் பள்ளிகளை வைத்து அரசியல் சதுரங்க ஆட்டம் ஆடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இந்தத் துணிச்சலைக் கொடுப்பது யார்?

நாகரிகமான முறையில் மனிதர்களாக ஒரே மேஜையில் அமர்ந்து பேச வேண்டிய ஒரு விவகாரத்தை இந்தக் குறுமதியாளர்கள் விகாரமாக்கி வருகின்றனர்.

இவர்கள் இப்படி கேடுகெட்டத்தனமாகப் பேசியும் மிரட்டியும் வருகின்ற நிலையில் தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பும் இந்தியர் – சீனர் அல்லாத பெற்றோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமே உள்ளது.

இது தாய்மொழிப் பள்ளிகள் மீது அவர்களுக்கு உள்ள அசைக முடியாத நம்பிக்கையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களின் ஓலம்தான் தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்ற கூப்பாடு.

இங்கு பூச்சோங்கில் து ஜுன் ஹிங் சீன ஆரம்பப்பள்ளி நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக சுபாங் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ அர்மாண்ட் அஸஹா அபு ஹனிஃப் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஆட்சேப மறியல் நடத்தினார்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு ஒரு சீனப்பள்ளி தேவையில்லை என்ற விஷத்தை அவர் கக்கினார்.

நாடு இருக்கும் நிலையில் அவரின் இந்த ஆட்சேப மறியல் அவசியம்தானா? இப்படி அரைகுறை புத்தியுடன் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததால்தான் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் மரண அடி வாங்கினர்.

பல கலவைகள் மூலம் தேசிய ஒற்றுமையை இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்ற உண்மையை இவர்கள் தொடர்ந்து ஏற்க மறுப்பதுதான் ஏன் என்பது புரியவில்லை.

பகாசா மலேசியா நாட்டின் தேசிய மொழி என்பதை இந்தியர்களும் சீனர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தாய்மொழி மீது இவர்கள் தூவும் வெறுப்பு விதைகள் அவர்களையே திருப்பி அடிக்கும் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.

அறிவாளிகளுக்கு இது எளிதாக விளங்கும். முட்டாள்களுக்கு முட்டிக்கொண்டாலும் புரியாது.

மிகத் தெளிவான புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் தேசிய ஒற்றுமையின் ஆணிவேர் என்பதை இந்த அரைவேக்காடுகள் புரிந்துகொண்டால் கேடு இல்லை!

– பி.ஆர். ராஜன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here