கோலாலம்பூர், குடிநுழைவுத் துறை தெர்மினல் பேருந்து முனையத்தில் (டிபிஎஸ்) நடத்திய சோதனையில் 36 ஆவணமற்ற வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த நடவடிக்கையில் 32 வெளிநாட்டு ஆண்களும் நான்கு வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டதாக துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒரு அறிக்கையில், வெளிநாட்டினர் கோலாலம்பூருக்கு கோத்தா பாரு, கிளந்தான் நகரிலிருந்து விரைவுப் பேருந்துகளில் ஏறி வந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
சோதனை நடத்திய குழு, தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையிலிருந்து டிபிஎஸ் வரை மூன்று விரைவுப் பேருந்துகளை பின்தொடர்ந்ததாக அவர் கூறினார். அனைத்து பயணிகளும் பேருந்துகளில் இருந்து இறங்கியதும், சோதனைக் குழு உள்ளே சென்றது. 20 பங்களாதேஷ் ஆண்கள் மற்றும் மியன்மாரை சேர்ந்த 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 12 ஆடவர்களும் நான்கு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
மேலும் சில வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்ததில், அவைகள் முத்திரையிடப்படவில்லை என்றும், மற்றவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் கூட இல்லை என்றும் தெரியவந்தது. முந்தைய குற்றங்கள் காரணமாக கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
வெளிநாட்டினரை கும்பல் அண்டை நாடு வழியாக மலேசியாவிற்கு கடத்தியதாக ரஸ்லின் கூறினார். பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்வதற்காக பொது போக்குவரத்து மூலம் பினாங்கு மற்றும் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறினார். ஒவ்வொரு வெளிநாட்டவரும் நாட்டிற்குள் நுழைவதற்கு கும்பல் RM10,000 செலுத்தியிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் செமினியில் உள்ள குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.








