புக்கிட் அமானுக்கு அழைத்தது அவசியமற்றது- அன்வார் சாடல்

உள்துறை அமைச்சரின் உரையாடலே ஒலிப்பதிவு செய்யப்படும்போது இந்நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது? போலீஸ் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்-
எனக்கும் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடிக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் ஒலிப்பதிவு கசிந்தது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க என்னை புக்கிட் அமானுக்கு அழைத்திருப்பது அவசியமற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கூறினார்.

புக்கிட் அமானில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒலிப்பதிவு கசிவு தொடர்பில் இன்னும் கடுமையான வழக்குகளை போலீஸ் விசாரித்திருக்க வேண்டும்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு விவகாரமும் இவற்றுள் அடங்கும் என்று அன்வார் சொன்னார்.

இரண்டு உயர்நிலைத் தலைவர்களுக்கு இடையே குறிப்பாக உள்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட தனிநபர் உரையாடல் பதிவை அடையாளம் தெரியாத நபர்கள் தங்கள் கைவசம் வைத்திருப்பது மிகக் கடுமையான பிரச்சினையாகும் என்று கெஅடிலான் தேசியத் தலைவருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.

குற்றச்செயல்களை ஒடுக்குவதில் போலீஸ் கவனம் செலுத்த வேண்டும். தலைமறைவாக இருக்கும் ஜோ லோ, நிக்கி லியூ போன்றவர்களைப் போலீஸ் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. போலீஸ் அரசியல் கருவியாக மாறிவிடக்கூடாது என்று அவர் புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்த பிறகு நிருபர்களிடம் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 505 பி கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அன்வாரின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார். அன்வார் தொடர்பில் எந்தக் குற்ற அம்சமும் இல்லை என்று அவர் மேலும் சொன்னார்.

வாக்குமூலம் அளிக்க அன்வாரை புக்கிட் அமானுக்கு அழைத்திருப்பது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அன்வாரின் இன்னொரு வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்தார்.

என்னுடைய கட்சிக்காரரை அச்சுறுத்தும் செயல் இதுவாகும். இது அவருடைய நேரத்தை வீணடிக்கும் செயல். இது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது சாட்சியின் வாக்குமூலம் மட்டுமே என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் என்னை எதற்காக புக்கிட் அமானுக்கு அழைக்க வேண்டும்? என் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ என்னைச் சந்தித்திருக்கலாமே என்று அன்வார் கூறினார்.

கடந்த மாதம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு அன்வாருக்கும் ஸாஹிட்டிற்கும் இடையே உரையாடல் நடந்ததாகவும் அது ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அதனை அவ்விரு தலைவர்களும் மறுத்திருந்தனர். வரும் பொதுத்தேர்தலில் அன்வாருடனும் பெர்சத்து கட்சியுடனும் ஜசெகவுடனும் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அந்த அம்னோ பொதுப் பேரவையில் முடிவுசெய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here