சிங்கப்பூர்-
சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் கோவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், இவ்வாரம் சிங்கப்பூருக்கு வருகை மேற்கொள்ளும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்து உரையாடுவதற்காக மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் திட்டமிட்டிருந்தார். நேற்று இடம்பெறவிருந்த இரு பிரதமர்களின் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய பயணத்தைப் படிப்படியாகத் தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட இருந்தது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேனும் நேற்றுத் தெரிவித்தனர்.
இரு நாடுகளிலும் நிலவும் தற்போதைய நிலைமை அதுபற்றி விவாதிக்கக்கூடிய சரியான சூழ்நிலையை உருவாக்கவில்லை என்றும் இரு அமைச்சர்களும் கூறினர்.
கடந்த வாரத்தில் சமூகத்தில் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களும் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களும் தலையெடுத்திருப்பதால் சிங்கப்பூர் தனது கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
அதேபோல், மலேசியாவில் கடந்த இரு வாரங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனது கோவிட்-19 நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.