பினாங்கு அரசு மருத்துவமனை அறிவிப்பு!
ஜார்ஜ் டவுன்-
பினாங்கு மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐசியூ என்று அழைக்கப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன என்று பினாங்கு முதல்வர் செள கோன் இயோ தெரிவித்தார்.
பினாங்கு அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவு கட்டில்கள் நேற்று முன்தினம் வரையில் 83 விழுக்காடு நிரம்பிவிட்டன என்று சுகாதார அமைச்சின் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே, நாம் எப்போதும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நம்முடைய மருத்துவத்துறை முடங்கிவிடப் போவதை நாம் அனுமதித்து விடக்கூடாது என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.
முன்னதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
பினாங்கு மாநிலத்தில் என்ன மாதிரியான எம்சிஓ விதிக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றார் அவர்.
பினாங்கு சமர்ப்பித்த மதிப்பீட்டு அறிக்கையை தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆய்வு செய்திருக்கிறது என்றார்.
பினாங்கில் தற்போது நிபந்தனைக்குட்பட்ட சிஎம்சிஓ அமல்படுத்தப்பட்டுள்ளது.
பினாங்கில் நேற்று முன்தினம் 305 பேருக்கும் நேற்று 313 பேருக்கும் புதிதாக தொற்று பரவியுள்ளது.