சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையே கருணை அடிப்படையில் பயணம்

சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையே கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணம்: விண்ணப்பங்கள் தொடங்கின

சிங்கப்பூர், மலேசிய மக்கள் மிகவும் அவசர காரணங்களுக்காக எல்லைத் தாண்டிய பயணம் மேற்கொள்ள இரு நாடுகளும் அண்மையில் ஒப்புதல் அளித்தன.

இதையடுத்து அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணியை இரு நாடுகளும் இன்று (மே 10) தொடங்கின.

உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட உறவினர்களை பார்ப்பது அல்லது இறுதிச் சடங்கில் பங்கேற்பது போன்ற அவசர காரணங்களுக்கு இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் இப்போது முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு சம்பவத்திலும் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய குடிநுழைவுப் பிரிவும் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் (ஐசிஏ) தெரிவித்தன.

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பு நடைமுறை நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். தனிமையில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுவது, கொவிட்-19 சோதனைக்கு உட்படுவது போன்றவை அவற்றில் அடங்கும்.

மருத்துவ சிகிச்சை அளிக்கும் இடங்களுக்கு சென்றுவர அல்லது இறுதிச்சடங்கில் பங்கேற்க விதிமுறைகளுக்கு உட்பட்டு எங்களுடைய அதிகாரிகள் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து தருவார்கள், என்று ஐசிஏ இணையத்தளம் தெரிவித்தது.

இணையம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் நெருங்கிய உறவினர்கள் மரணம் அடைந்ததற்கான சான்று அல்லது உறவினர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அதற்கான மருத்துவரின் கடிதம், உறவினருடனான குடும்பத் தொடர்பைக் காட்டும் ஆவணங்கள், கடவுச்சீட்டின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இதேபோன்ற காரணங்களுக்காக மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மலேசிய குடிநுழைவுப் பிரிவின் இணையத்தளம் வழியாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இவர்களும் கொவிட்-19 பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுவது அவசியம்.

இம்மாதம் முற்பகுதியில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைனும் சந்தித்துப் பேசியபோது, மே 17ஆம் தேதியிலிருந்து கருணை அடிப்படையிலான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே நிலவும் நெருக்கமான தொடர்பு காரணமாக இத்தகைய ஏற்பாடு அவசியம் என்று அப்போது அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். இரு நாடுகளிலும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமையிலிருந்து சமூக ஒன்றுகூடலுக்கான வரம்பை சிங்கப்பூர் கடுமையாக்கியுள்ளது. மலேசியாவும் மாநிலம், மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டத்துக்குத் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here