எப்படிப் பயன்படுத்தப்படுகிறது வெ.500 கோடி?

அரசாங்கம் விளக்க வேண்டும்

கோலாலம்பூர்-
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் இன்னும் குறைவாக இருக்கின்ற நிலையில் கோவிட்-19 தடுப்பூசி செலவுகளுக்காக தேசிய அறக்கட்டளை நிதியகத்திலிருந்து எடுக்கப்பட்ட 500 கோடி வெள்ளி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி பிரதமர் அவசியம் விளக்கமளிக்க வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

மலேசியாவில் இரண்டு சொட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 2.3 விழுக்காடாக மட்டுமே உள்ளது. மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தோனேசியாவில் 4.2 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதனுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் மிகவும் குறைவு என்று லிம் சுட்டிக்காட்டினார். அப்படியானால் 500 கோடி வெள்ளி எப்படி செலவுசெய்யப்பட்டது?

ஆசியப் பசிபிக் நாடுகளில் கோவிட்-19 பரவலால் மலேசியா மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. இன்றைய நிலையில் இந்தோனேசியாவைவிட மலேசியாவில் தொற்று விகிதம் அதிகரித்திருக்கிறது என்று அவர்   சொன்னார்.

இதனால்தான் கோவிட்-19 எஸ்ஓபி விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று இந்தோனேசியா தற்போது மலேசியாவை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறது என்று லிம் சொன்னார்.

கோவிட்-19 புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மலேசியாவின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தோனேசியர்களை அண்மையில் அந்நாட்டின் சுகாதார அமைச்சு எச்சரித்திருந்தது.

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையும் மரணமும் அதிகரித்திருப்பதால் இன்னொரு எம்சிஓ உத்தரவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இன்னும் எத்தனை எம்சிஓ உத்தரவுகளை மலேசியர்கள் கடந்துவர வேண்டும்? கடந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 நெருக்கடி தலைதூக்கியது முதல் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்க அரசாங்கம் ஒதுக்கிய 622 பில்லியன் நிதி ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்றுவிட்டதாக பெரும்பாலான மலேசியர்கள் உணரவில்லை என்றும் லிம் சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு மலேசியர்களுக்குப் பலன் அளித்திருப்பதாகத் தெரியவில்லையே ஏன் என்பது பற்றியும் அரசாங்கம் விளக்கம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

சில்லறை வணிகம், மொத்த வணிகம், கட்டுமானம், சுற்றுலா, உபசரணைத்துறை போன்ற துறைகளில் வேலைகளையும் வர்த்தகங்களையும் காப்பாற்றுவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பலன் அளிக்காமல் போனது ஏன் என்பது பற்றியும் அரசீ விளக்க வேண்டும்.
இதனால்தான் நாடாளுமன்றம் கூட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றோம்.

 தேசிய நெருக்கடியில் இருந்து மீட்சிபெற மலேசியர்களுக்கு உதவ ஒவ்வொரு காசும் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தனது செலவினங்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியும் என்றும் அவர்   சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here