தெளிவு இருந்தால் திறமையாய் செயல்படலாம் –

டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸைனால் திட்டவட்டம்

கோலாலம்பூர், 
பொறுமை, நிதானம், தெளிவு இருந்தால் எப்படிப்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளலாம் – சமாளிக்கலாம் என்கிறார் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸைனால் பின் ஹாஜி அப்துல்லா.

வயது 42தான். இருப்பினும் இந்த இளம் வயதிலேயே அவரிடம் காணப்பட்ட இந்தப் பண்புகள் அவரை முதிர்ச்சி அடைந்த ஓர் உயர் அதிகாரியாக காட்டுகிறது.

மலேசியாவின் தங்க முக்கோணம் என்று அழைக்கப்படும் கோலாலம்பூரின் மையப் பகுதியைக் காக்கும் மிகப்பெரிய சுமையை – பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். 1,250 அதிகாரிகளுக்குத் தலைமை ஏற்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

ஆனால், ஏசிபி முகமட் ஸைனாலிடம் காணப்படும் பொறுமையும் நிதானமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவரது தெளிவு எப்படிப்பட்ட நெருக்கடியையும் சமாளிக்கும் வல்லமையைக் கொண்டவர் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

\கடந்த மே 18ஆம் தேதி மரியாதை நிமித்தம் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மக்கள் ஓசை இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் (கோபி) ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது.

நுழைவாயிலிலிருந்து அவரது அலுவலகம் சென்றடையும் வரை முன்னேற்பாடுகள் மெய்சிலிர்க்க வைத்தன. அலுவலகத்தில் அவர் எங்களை எதிர்கொண்டு வரவேற்றபோது சற்று அதிர்ந்துதான் போனோம்.

முகம் மலர்ந்த நிலையில் வரவேற்றது வயதானவர் அல்ல. மாறாக ஓர் இளம் அதிகாரி. நம்ப முடியாமல் கேட்டோம். நான்தான் நீங்கள் பார்க்க வந்திருக்கும் ஓசிபிடி என்று சிரித்துக் கொண்டே அவரிடமிருந்து பதில் வந்தது.

இந்த சின்ன வயதில் இத்தனைப் பெரிய பொறுப்பா? என்ற அடுத்த கேள்விக்கு, மனத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் இருந்தால் எப்படிப்பட்ட சுமையும் பஞ்சு போன்றதுதான் என்றார் அவர்.

சரவாக், தாவாஸ் எனும் சிற்றூரில் பிறந்த ஏசிபி முகமட் ஸைனால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்காதவர். நான்கு பட்டங்கள் வைத்துள்ளார். தொடர்ந்து படிக்கப் போகிறாராம்.

அரசு தந்திர நிர்வாகப் பிரிவில் ஓர் அதிகாரியாக தமது பணியைத் தொடங்கிய அவர், போலீஸ் பணி மீது கொண்ட காதலால் அதில் இருந்து விடுபட்டு அரச மலேசியப் போலீஸ் படையில் சேர்ந்தார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது பகுதி நேரமாக ஆசிரியர் தொழிலை விரும்பிச் செய்திருக்கிறார். இந்தத் தொழில்தான் தமக்கு நிதானத்தையும் தெளிவையும் பொறுமையையும் கற்றுத் தந்தது என்று அகம் மகிழ்ந்து  சொன்னார் ஏசிபி முகமட் ஸைனால்.

அதே சமயத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தது சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுத் தந்தது.

அதுவே இன்று மிகப்பெரிய ஒரு போலீஸ் படைக்கு தமக்குத் தலைமை ஏற்க வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்பு கேம்பல் போலீஸ் என்று அழைக்கப்பட்டதுதான் இன்றைய டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம்.

மாநகரின் மையப் பகுதியில் உள்ள இப்போலீஸ் தலைமையகத்தின் அதிகாரத்திற்குட்பட்டிருக்கும் பகுதிகள் மிகப் பிரபலமானவை. நாடாளுமன்றம், கேஎல்சிசி, உலக புத்ரா வாணிப மையம், புக்கிட் பிந்தாங், மஸ்ஜிட் இந்தியா, சோகோ, ஜேக்கல், உயர் நீதிமன்ற வளாகம், மெர்டேக்கா சதுக்கம் போன்றவை அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.

அதே சமயத்தில் அம்னோ, மஇகா, மசீச, பாஸ் போன்ற  கட்சிகளின் தலைமையகங்களும் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக இருக்கின்றன.

சாமானியர்கள் முதல் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் துணை அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் வரை பலதரப்பட்ட மனிதர்களையும் நாளும் கண்டு வருகிறது இப்போலீஸ் தலைமையகம்.

அதிகாரத்திற்கு உட்பட்ட இடமும் விசாலமானது. அதற்கு ஏற்றாற்போல் பிரச்சினைகளும் சிக்கல்களும் பெரியதுதான்.

அரசியல் போராட்டங்கள், நாடாளுமன்றம் முன் திரளும் மக்கள் எழுச்சிக் கூட்டங்கள், மெர்டேக்கா சதுக்கத்தில் திரளும் பொதுமக்களின் எழுச்சிக் குரல்கள் போன்றவற்றை எவ்வித சேதாரங்களும் இன்றி  சமாளிப்பது இவரது மிகப்பெரிய  சாதுர்யமாக இருக்கிறது.

ரிஸ்க் இவரைப் பொறுத்தவரை ரஸ்க்  சாப்பிடுவது போலத்தான். எப்படிப்பட்ட பிரச்சினையானாலும் அதனை வெகு சாமர்த்தியமாகவும் பதற்றமே இல்லாமல் மிகுந்த நிதானத்துடனும் அணுகுவது ஏசிபி முகமட் ஸைனாலின் ஆளுமையைத் தெளிவாகவே பிரதிபலிக்கிறது.

சில அரசியல் பிரபலங்களுக்கு டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையக லோக்காப் கிட்டத்தட்ட ஒரு ஹோட்டல் போன்றே ஆகி விட்டது. அடிக்கடி அவர்கள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படுவதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ), எஸ்ஓபி விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருப்பதால் குற்றச்செயல்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதனால் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட முடிகிறது என்று அவர்  சொன்னார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எத்தரப்பாக இருந்தாலும் போலீஸின் நீதி தராசு எந்தப் பக்கமும் சாயாது என்ற உண்மையையும் நீதியையும் நிலை நிறுத்துவதைத் தாம் எப்போதும் உறுதி செய்து வருவதாக ஏசிபி முகமட் ஸைனால் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் பொதுப் பேரவைகள், ஆண்டுக் கூட்டங்கள் எவ்வித சலசலப்பும் இன்றி நடைபெறுவதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். தேவையான உதவிகளையும் செய்து தருகிறோம். பாதுகாப்புக்குப் படையினரையும் அனுப்பி வைக்கிறோம்.

ஹரிராயாவுக்கு சில தினங்களுக்குப் பிறகு உலக புத்ரா வாணிக மையத்தில் 2,000 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினம் கிட்டத்தட்ட 8,000 பேர் திரண்டு வந்ததில் பதற்றம் நிலவியது. ஏற்பாட்டாளர்கள் எங்கள் உதவியை நாடினர்.

அங்கு விரைந்த நாங்கள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏழு தடங்களை அமைத்து, ஒவ்வொரு தடத்திலும் 10 அதிகாரிகளை அமர்த்தி சுமுகமான முறையில் அந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை உறுதி செய்தோம்.

தம்முடைய 70 அதிகாரிகள் நிலைமையைக் கூர்மையாகக் கவனித்து எவ்வித சலசலப்பும் ஏற்படாமல் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இதுவெல்லாம் ஒரு சவால்தான் என்று ஏசிபி முகமட் ஸைனால் சுட்டிக்காட்டினார்.

இவரது துணைவியார் டாக்டர் ரிட்சே ஈசா மெடினா, இங்கு செந்தூல் கான்வென்ட் பள்ளி ஆசிரியர். கல்வித் துறையில் பிஎச்டி படிப்பை முடித்துள்ளார். 3 பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்  அவர்.

-பி.ஆர். ராஜன் – படங்கள்: தி. மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here