பள்ளிக்குழந்தைகள் பாதிப்பு – என்னதான் பதில்

 

பதில் – சொல்லப்போகிறவர் யார்?

நாடு முழுமையிலும் 64,046 சிறார்கள் கொடிய கோவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

கோப்பு படம்

2021, மே 18ஆம் தேதி வரை இந்த எண்ணிக்கைப் பதவாகி இருப்பதாக சீகாதார அமைச்ங்ர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாண்டு 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 23,739 மாணவர்கள் இத்தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

2020 முழுவதும் 8,369 சிறார்களை கோவிட்-19 கிருமித் தொற்று பாதித்திருக்கிறது. மாணவர்களைப் பொறுத்தவரை அனைத்துப் பள்ளிகளிலும் கோவிட்-19 பரிசோதனை நடத்தும்படி நாடு முழுமையிலும் உள்ள அனைத்து சுகாதார அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ள மாணவர்களைப் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கும்படி பள்ளி நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிறார்கள் பாதிக்கப்பட்டிருப்பது குலை நடுங்க வைக்கிறது. இந்தப் பாதிப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது? அரசாங்கமா, பெற்றோரா, பள்ளிகளா?

பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசாங்கம் முடிவு செய்தபோது, அவசரம் காட்ட வேண்டாம் – பிள்ளைகளின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், ஏப்ரல் மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், பயப்பட வேண்டாம், பிள்ளைகளைத் தாராளமாகப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்று அதில் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

ஜனவரியில் இருந்து 23,000 மாணவர்கள் கோவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளி திரள்களை சமாளித்து தீர்வு காணும் ஆற்றலை அமைச்சு கொண்டிருக்கிறது என்றும் அதன் அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.

ஆனால், இப்படி ஒரு பேரிடர் நடப்பதற்கு முன்னதாகவே பள்ளிகளை மூடும்படி விடுக்கப்பட்ட பல தரப்பினரின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கப்படவே இல்லை. இருப்பினும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே வந்தது.

இப்போது மொத்தமாக 64,046 மாணவர்கள் இக்கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு யாரிடமிருந்து எங்கிருந்து இருக்கிருமித் தொற்று பரவியது?

தொற்று கண்ட பிள்ளைகள் வீடுகளுக்குத் திரும்பி அங்கு பெரியவர்களுக்குப் பரவியதா? இவர்களால் வீடுகளில் உள்ள பெற்றோர், உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்டனரா?

இத்தனை கேள்விகளுக்கும் யார் பதில் சொல்லப் போகிறார்கள்? ஆபத்து என்று தெரிந்தும் ஏன் இத்தனை மெத்தனம் – அலட்சியம்? பதில் கிடைக்குமா?

இந்த 64,046 சிறார்களின் இன்றைய நிலை என்ன? மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்களா? உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதா? உடல் நலம் தேறி விட்டார்களா? உயிர் விபரீதம் ஏதும் நடந்துள்ளதா?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் தரப்போவது யார்? பொறுப்பேற்கப் போவது யார்?
64,046 என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. மேலும் இக்கொடிய கிருமித் தொற்றின் பாதகங்களை – தாக்குதலைத் தாங்கும் வயதா இவர்களுக்கு?

அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here