பருவநிலை மாற்றத்தில் புதிய அச்சுறுத்தல்

சிங்கப்பூர் பிரதமர் முன் வைப்பு

சிங்கப்பூர்- 
காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் லீ சிங்கப்பூரின் பசுமைத் திட்டத்தைப் பற்றி விவரித்தார். சிறிய நாடாக, பருவநிலை மாற்றத்தில் சிங்கப்பூர் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்த முடியாது. ஆனால் இயன்ற அளவு சிங்கப்பூர் அதன் பங்கையாற்றி ஆதரவு வழங்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் ஓர் அவசர அச்சுறுத்தலாகும். மனிதகுலத்திற்கு எதிரான இந்த உலகளாவிய சவாலில் அனைத்து நாடுகளும் பாரிஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் நடத்திய இந்தச் சந்திப்பில் பிரதமர் லீ, சிங்கப்பூரின் ‘பசுமைத் திட்டம் 2030’ பற்றி பேசினார். கோவிட்-19க்கு பிந்திய காலத்தில் சிங்கப்பூர் நீடித்து நிலைத்திருக்கும் முயற்சிக்கு இதனை உதாரணமாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நீடித்த மேம்பாடு, கரிம வெளியேற்றம் முற்றிலும் இல்லாதது, பசுமை சார்ந்த பொருளியல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாக பசுமைத் திட்டம் திகழ்கிறது.

முதலில் கரியமில வாயுவை வெளியேற்றும் பொருளியலை சிங்கப்பூர் உருமாற்றி வருகிறது. கடல்துறை, விமானத் துறைகளில் எரிபொருளுக்கு மாற்றாக தானியக்கமயம், மின்னிலக்கமயம், உயர்தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் கரிம வெளியேற்றத்தைக் குறைத்து வருகிறது. எரிசக்தி, ரசாயனத் துறைகளில் கரிம வெளியேற்றம் அல்லாத மேம்பாடுகளைச் செய்து வருகிறது.

உதாரணமாக, பெட்ரோல் ரசாயன மையமாக விளங்கும் ஜூரோங் தீவில் சிறந்த தொழில்நுட்பங்களைப் புகுத்தி நீடித்த எரிசக்தி, ரசாயன நிலையமாக உருமாற்றி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவதாக சிங்கப்பூர் பசுமை பொருளியலாக வளர்ச்சி அடையும். மூன்றாவதாக நீடித்த வளர்ச்சிக்குப் பசுமை சார்ந்த நிதித் திட்டங்களுக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here