கோலாலம்பூர்:
உயர் தொழில்நுட்ப பரிமாற்றம், செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும் பின்லாந்தும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன.
பின்லாந்து அதன் முன்னேற்றமான தொழில்நுட்ப திறன்களும், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் கொண்டுள்ள நிபுணத்துவத்தாலும் உலக அரங்கில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்று, பின்லாந்து பிரதிநிதி எலினா வால்டோனன் உடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பின்லாந்தின் கல்வி முறை உலகின் சிறந்தவற்றில் ஒன்றாகும். தற்போது டாமன்சாரா மற்றும் சைபர்ஜெயாவில் உள்ள இரண்டு மலேசிய பள்ளிகள் பின்லாந்து கல்வி திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இது நம் கல்வி தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய முன்னேற்றம்,” என்றார்.
இந்த சந்திப்பு, இன்று முதல் அக்டோபர் 28 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சி மாநாடுகள்க்கு முன்னதாக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசியா–பின்லாந்து வர்த்தக உறவுகள் தற்பொழுது குறைந்த அளவில் இருந்தாலும், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி குறித்த பார்வையில் இரு நாடுகளும் ஒரே எண்ணத்தைக் கொண்டுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.




















