வாழ்க்கை முழுக்க வேதனை தொடருமா?

 

எங்கே ஒளிர்வது சாதனைத் தீ?

லங்காப்-

வாழ்க்கை முழுக்க வேதனையே தீயாக எரிந்து கொண்டிருந்தால் எங்கே ஒளிர்வது சாதனைத் தீ என கண்ணீர் மல்க கேள்வி எழுப்புகிறார் வாழும் வயதில் தன் கணவனை இழந்து மிகுந்த வேதனையுடனும் சோகத்துடனும் விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோகிலா சரவணன் (27 வயது).

சின்ன வயதிலேயே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால் விதியின் விளையாட்டு இவரையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் 28.3.2021ஆம் தேதி என் கணவர்

சே.தேவேந்திரன் (28 வயது) திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை தெலுக் இந்தான் பெரிய மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நுரையீரலில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர்.

மருத்துவர்களின் பதிலை கேட்டவுடன் இது எப்படி, எப்போது, நடந்தது என்று அதிர்ச்சிக்குள்ளானேன். அப்போதுதான் கடந்த பிப்ரவரி மாதம் என் கணவர் மருந்து தெளிக்கும் வேலைக்குச் சென்றது என் ஞாபகத்திற்கு வந்தது.

அம்மருந்து அவரின் நுரையீரலில் கலந்து விட்டதால் இன்று அவரின் உயிரே போய்விட்டதென சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோகிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்து கன்னங்களை ஊடுருவி தரையில் விழுந்தது.

மூன்று வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் கணவர் சிகிச்சைப் பலனளிக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி மாலையில் என்னையும் என் மூன்று பிள்ளைகளையும் பிரிந்து, இந்த உலகத்தை விட்டே மறைந்து விட்டார் எனக் கதறிக் கதறி அழுதார் கோகிலா.

வறுமையின் காரணமாக தங்குவதற்கு கூட சொந்த வீடு இல்லாமல் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை ஜாலான் ஆயர் ஹீத்தாம்,

கம்போங் சுய் சாக், லங்காப் எனும் முகவரியிலுள்ள நெல் கிடங்கு ஒன்றில் தன் கணவர், மூன்று பிள்ளைகள் மற்றும் தாயாருடன்
தங்கியிருந்தோம்.

அங்கு மின்சார வசதியும் இல்லை, குடிநீர் வசதியும் இல்லை. இருப்பினும் குடும்பச் சூழ்நிலை காரணமாக பல இன்னல்களுக்கிடையிலும் போராட்டங்களுக்கிடையிலும் அங்கு வசித்து வந்தோம்.

மக்கள் ஓசை செய்தியின் மூலம் தவிகள் கிடைத்தன. மக்கள் ஓசை நிருபரின் வேண்டுகோளுக்கிணங்க சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸைனோல் ஃபட்சி பின் ஹாஜி பஹாருடின், நாங்கள் தங்குவதற்கு கம்போங் பாரு, லங்காப்பில் சீனருக்கு சொந்தமான வாடகை வீடு ஒன்றைப் பெற்றுத் தந்தார்.

அங்கு மிகவும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தோம். ஏழ்மையின் காரணமாக பல மாதங்களாக பள்ளிக்குச் செல்லாத என் பிள்ளைகளும் மீண்டும் மகிழ்ச்சியுடன் பள்ளி செல்ல ஆரம்பித்தனர்.

நானும் வீட்டின் அருகிலுள்ள ஒரு சீன உணவகத்தில் பாத்திரங்கள் கழுவும் வேலைக்குச் சென்றேன். கணவருக்கும் நல்ல வேலை கிடைத்தது. அவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார். என் அம்மா கி.முனியம்மா (50 வயது)
வீட்டிலிருந்து எங்களின் பிள்ளைகளை கவனித்துக் கொண்டார்.

அனைத்தும் சுமுகமான முறையில் போய்க் கொண்டிருந்த வேளையில்
திடீரென நேர்ந்த என் கணவரின் மரணத்தால் நானும் என் மூன்று பிள்ளைகளும் இன்று நிர்கதியாக நிற்கின்றோம் என மிகுந்த கவலையுடன் அவர் தெரிவித்தார்.

என் கணவர் மருத்துவமனையில் இறந்ததால் அவரின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம் என நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் என்னிடம் கட்டளையிட்டார். காரணம் சீனர்களின் நம்பிக்கைப்படி வெளியில் இறந்தவர்களின் சடலத்தை வீட்டிற்குக் கொண்டு வரக்கூடாதாம்.

இறுதியாக டத்தோ ஸைனோல் ஃபட்சியின் அலுவலக அதிகாரியான லீ ஹு சோங் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளரான அந்த சீன மாது என் கணவரின் சடலத்தை வீட்டிற்குக் கொண்டுவர ஒப்புக் கொண்டார்.

கணவர் இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அந்த சீன மாது என்னையும் என் 3 பிள்ளைகளையும், என் அம்மாவையும் வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறிவிட்டார். கணவரின் சடங்குகள் இன்னும் முடியவில்லை. திடீரென்று வெளியில் போக சொன்னால், சிறு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நான் எங்கு செல்வது என்று கேள்வி எழுப்பினேன்.

மூன்று மாதங்களுக்கான வாடகை முன் பணம் செலுத்தி உள்ளோம். ஆதலால் எங்களுக்கு வீடு கிடைக்கும் வரை இந்த வீட்டில் தங்கிக் கொள்கிறோம் என அந்த சீன மாதுவிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக கோகிலா தெரிவித்தார்.

மூன்று வாரங்கள் கணவர் மருத்துவமனையில் இருக்கும்போது என்னால் சரியாக வேலைக்குச் செல்லை முடியவில்லை. ஆதலால் செய்து கொண்டிருந்த வேலை பறிபோனது. தற்போது பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக வேலை கிடைக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது.

என் பிள்ளைகள் தே.கவிநேசன் (10 வயது), தே. பிரவினா (7 வயது), தே. கீர்த்திகா (5 வயது) மூவருக்கும் என்னால் நல்ல உணவுகளைக்கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. கணவரை இழந்து மிகவும் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் ஓசை செய்தியின் மூலம் கடந்தாண்டு முதல் சமூகநல இலாகாவிலிருந்து கிடைக்கும் 300 வெள்ளியைக் கொண்டு தான் தற்சமயத்திற்கு குடும்பத்தை ஓரளவு சமாளித்துக் கொண்டிருப்பதாக கோகிலா கூறினார்.

என் மூன்று பிள்ளைகளும் தினமும் தங்கள் அப்பாவை தேடுகிறார்கள். என் இளைய மகள் கீர்த்திகாவிற்கு அப்பா ஏக்கம் வந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். என் பிள்ளைகளுக்காக மட்டும் தான் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் மட்டும் இல்லாவிட்டால் என் கணவர் இறந்தபோதே நானும் இறந்திருப்பேன் என்று மிகுந்த விரக்தியுடன் அவர் கூறினார்.

மற்ற பெண்களைப்போல் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் தன் கணவனை இழந்து விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோகிலா மற்றும் தந்தையை இழந்து ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் மூன்று பிள்ளைகளுக்கும் உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் 011-31464303 என்ற எண்ணில் கோகிலாவை தொடர்புக் கொண்டு உதவ முன் வரலாம்.

நாங்கள் எந்தவொரு தங்கு தடையும் இன்றி நிம்மதியாக தங்குவதற்கு ஜாலான் லக்சமணாவில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான மலிவு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து தர பேராக் மாநில அரசாங்கம் உதவ வேண்டுமென கோகிலா கேட்டுக் கொண்டார்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் டத்தோ புவான் ஹஜ்ஜா ஸுரைடாவின் சார்பில் கோகிலாவிற்கு உணவுப் பொருட்கள் அடங்கிய டின் ஒன்றினை வழங்கினார் மக்கள் ஓசை நிருபர்.

 

டில்லிராணி முத்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here