வியட்னாமில் காற்றில் மிகவேகமாகப் பரவக்கூடிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது

வியட்னாமில் புதிய உருமாறிய காற்றில் மிகவேகமாகப் பரவக்கூடிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அது இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதலில் காணப்பட்ட உருமாறிய கிருமிகளின் கலவை என்றும் வியட்னாமிய சுகாதார அமைச்சர் வேன் தான் லோங் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய கோவிட் கிருமியுடன் பிரிட்டனில் காணப்பட்ட உருமாறிய கிருமி கலந்திருப்பதாக பரிசோதனைகள் காட்டியுள்ளன என்றும் இந்த புதிய உருமாறிய கிருமி பற்றி உலக மரபணு வரைபடத்தில் வியட்னாம் தகவல் தெரிவிக்கும் என்றும் வேன் கூறினார்.

வியட்னாம் கடந்தாண்டு கோவிட் -19 கிருமிப் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடந்த ஒரு மாதமாக அங்கு மீண்டும் கிரமிப் பரவல் தலைதூக்கியுள்ளது. அந்நாட்டின் 63 நகரங்களில் இதுவரை 31 நகரங்களில் 2ஆம் அலை கோவிட் தொற்று பரவியுள்ளது.

கிட்டத்தட்ட 3,600 பேருக்கு அங்கு கோவிட் -19 தொற்றியுள்ளது. இவர்களில் பலருக்கு இந்த புதிய உருமாறிய கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய உருமாறிய கிருமியால் மிக வேகமாக தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் தன்மை உள்ளதாக ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் காட்டுகின்றன என்றும் வேன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here