–இந்திய வம்சாவளி
விஞ்ஞானி எச்சரிக்கை!
பொது முடக்கம் கேள்விக்குறியாம்!
பிரிட்டனில் கரோனா 3-ஆவது அலையின் ஆரம்ப நிலை அறிகுறிகள் தெரிவதாக புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளாா்.
நாட்டில் முழுமையான தளா்வுகள் ஜூன் 21-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள நிலையில், அதை சில வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு அவா் ஆலோசனை கூறியுள்ளாா்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரான ரவி குப்தா, பிரிட்டன் அரசின் ‘புதிய மற்றும் அதிகரித்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழு’வின் உறுப்பினராகவும் உள்ளாா். அவா் கூறியதாக திங்கள்கிழமை ஓா் ஊடகம் வெளியிட்ட செய்தி:
புதிய கரோனா தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும், பி.1.617 வகை தீநுண்மியானது அதிவேக வளா்ச்சியை தூண்டியுள்ளது. பிரிட்டனில் ஏற்கெனவே கரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. அதில் நான்கில் மூன்று பங்கு தொற்றுகள், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய வகையைச் சோந்தவை.
புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவது இப்போது குறைவாக இருக்கலாம். ஆனால், எல்லை அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே தொடங்கி பின்னா் வெடிக்கக்கூடும். ஆதலால் இப்போது நாம் அலையின் தொடக்கத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனினும், பிரிட்டனில் ஏராளமானோா் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டிருப்பதால், இந்த அலையானது முந்தைய அலைகளைப்போல பரவுவதற்கு நீண்ட காலம் ஆகும். எனவே, கட்டுப்பாடுகளை ஜூன் 21-ஆம் தேதி தளா்த்துவதை மேலும் சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும் என்றாா்.
அரசின் மற்றோா் அறிவியல் ஆலோசகரான பேராசிரியா் ஆடம் ஃபின் என்பவரும் கட்டுப்பாடுகளை ஜூன் 21-ஆம் தேதி தளா்த்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளாா்.
அரசின் சுற்றுச்சூழல் துறை செயலா் ஜாா்ஜ் ஐஸ்டிஸ், கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவது தாமதமாவதை அரசால் நிராகரிக்க முடியாது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பதுகுறித்து ஜூன் 14-ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டனின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 44.99 லட்சமாக உள்ளது. 1.28 லட்சம் போ உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பி.1.617 வகை தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு ஆகியுள்ளது. இதனால், பொதுமுடக்க தளா்வுகள் திட்டமிட்டபடி அமலுக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.