மின்சுடலை இயந்திரங்கள் பழுது

பழுது நீக்க  பணியாளர்கள் முன் வரவில்லை

சிரம்பான்-
சிரம்பான் டெம்ப்ளர் மின்சுடலையில் கடந்த சில தினங்களாக உடல்களைத் தகனம் செய்ய அனுமதி வழங்கப்படாதது ஏன் என்று நெகிரி செம்பிலான் குருக்கள் சங்கத் தலைவர் சிவஸ்ரீ விஜயகுமார் குருக்கள் கேள்வி எழுப்பினார்.

இந்த மின்சுடலையில் கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும் மற்றவர்களின் உடல்களைத் தகனம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை எனவும் சில குடும்பத்தார்  முறையிட்டிருக்கின்றனர். 

உடல்களைத் தகனம் செய்ய அங்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை எனவும் கடந்த சில தினங்களாக அந்த மின்சுடலையின் பணியாளர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தகனம்செய்யும் பணியை மேற்கொள்ள ஆள்பலப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றும் அறியப்படுகிறது

கோவிட்-19 தொற்றுக் காரணமாக இறப்பவர்களின் உடல்கள் அனைத்தும் இந்த மின்சுடலையில்தான் தகனம் செய்யப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருப்பதாகவும் டத்தோ முத்துப் பழனியப்பன் கூறினார்.

இதனால் தினசரி தொடர்ச்சியாக பலருடைய உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக மின்சுடலை தகன இயந்திரம் பழுதாகி விட்டது. அதன் மின்னியல் தொடர்புக் கருவிகளைப் பழுது நீக்கும் தொழில்நுட்பாளர்கள் சிலர் மட்டுமே இங்கு உள்ளனர்.

அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்தால் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் அங்கு தகனம் செய்யப்படுவதால் அதனைப் பழுதுபார்ப்பதற்கு பயப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, கெமிஞ்சே வட்டாரத்தில் இந்தத் துறையில் ஆற்றல்பெற்ற இந்தியர் உள்ளார். அவரை வரவழைப்பதற்கு தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி அளிக்க மறுக்கிறது.

இந்த நிலையில் இங்குள்ள இரண்டு தகன இயந்திரங்களும் பழுதாகி விட்ட நிலையில் அதனைச் சரிசெய்வதற்கு வாய்ப்பின்றி இருப்பதாக  முத்துப்பழனியப்பன்  சொன்னார்.

இதற்குத் தீர்வு காணப்படும் வரையில் உடல்களை இந்து மயான சங்கத்தால் பராமரிக்கப்பட்டு வரும் செண்டாயாங் இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here