சிவப்பு அடையாளக்கார்டு – நிலை என்ன?

வருமுன் காத்திடுக !

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மலேசியர்களாகப் பிறந்திருந்தும் அடையாள ஆவணங்கள் இன்றி இருப்போர் நிலை என்ன என்ற ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கிறது.

சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருப்போரும் கேள்விக்குறி பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பது ஒரு புதிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவிட்-19 கிருமி பெருந்தொற்றின் கோரப்பிடியில் நாடு சிக்கிக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் நேற்றைய எண்ணிக்கை 8,209. இவர்களோடு சேர்த்து நாட்டில் இதுவரை 5 லட்சத்து 95 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதன்கிழமை ஒரே நாளில் 126 பேர் மரணமுற்றிருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நாடு இதுவரை சந்தித்தது இல்லை. மக்களை மனத்தில்  அதிர்ச்சி அலை கவ்விக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மலேசியாவில் பிறந்திருந்தும் ஆவணங்கள் இல்லாத ஒரே காரணத்தால் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுமா என்ற நிலை உருவானால் மறுக்கப்படக்கூடாது என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

இந்தப் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதுதான் நம்முடைய பொது இலக்காகவும் நோக்கமாகவும் இருக்கிறது. அதற்கான  முன்னெடுப்பும் முக்கியமாகவும் அவசியமாகவும் அத்தியாவசியமாகவும் இருக்கிறது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் இவ்விவகாரத்தில் சில தளர்வுகளை அமல்படுத்தி ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அனுமதி வழங்கிட வேண்டும்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கைரி ஜமாலுடின் இதில் சற்று கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு உள்துறை அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்கிட வேண்டும்.

தாமதங்கள் வேண்டாம். தாமதங்கள் அநீதியை ஏற்படுத்திவிடும். கருணையும் மனிதநேயமும் முன்னுரிமை பெறட்டும். மலேசியர்களாக நாம் அனைவரும் ஒரே இதயத்துடன் இணைந்தால் மட்டுமே கோவிட்-19 கிருமி பெருந்தொற்றுக்கு நிரந்தர சமாதி கட்ட முடியும்.

மலேசியாவில் கோவிட்-19 கிருமி பெருந்தொற்றின் கொடூரப் பிடியில் சிக்கி நிலைமை மோசமடைந்து மருத்துவமனை தீவிர கண்காணிப்புப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எம்சிஓ 3.0 அமலில் இருக்கிறது. அவசியமின்றி வெளியில் செல்லாமல் இருப்போம். நம்மையும் பாதுகாத்து நம்மை நம்பி இருப்போரின் பாதுகாப்பையும் உறுதிசெய்திடுவோம்.
அலட்சியம் – ஆபத்துக்கு அறிகுறி – வருமுன் காபதே அறிவுடை செயல்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here