முன்னாள் தேசிய சைக்கிள் ஓட்ட வீரர், சிறுமியை தவறாக தொட்ட குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் குற்றம் மறுப்பு

அம்பாங்,

முன்னாள் தேசிய சைக்கிள் ஓட்ட வீரர் மற்றும் 1998 காமன்வெல்த் போட்டியின் வெள்ளிப்பதக்கம் வென்றவரான நோர் எஃபாண்டி ரொஸ்லி மீது, 15 வயது சிறுமியை தவறாக தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், தான் நிரபராதி என கூறியுள்ளார்.

58 வயதான நோர் எஃபாண்டி, கடந்த ஜூன் 2024ல் தாமன்தெசா கெராமட் பகுதியில் உள்ள Fun D Cycle Point என்ற சைக்கிள் கடையில், பயிற்சி பெற்ற சிறுமியின் கால்கள், மார்பு மற்றும் பின்பகுதியை தடவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிகழ்ந்த போது அவர் அந்த சிறுமியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு, குழந்தைகள் மீது பாலியல் குற்றச் செயல்கள் தடுப்பு சட்டம் 2017ன் பிரிவு 14(a) மற்றும் பிரிவு 16(1)இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு வரை சிறை மற்றும் குறைந்தது 2 தடவைகள் பிரம்படி உள்ளிட்ட தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

சந்தேகநபரின் வழக்கறிஞர் ஹம்தான் ஹம்சா, அவர் DBKL-இல் உதவி அமலாக்க அதிகாரியாக உள்ளதாகவும், மாதம் சுமார் RM5,000 சம்பளம் மட்டுமே பெறுவதாகவும் கூறி RM5,000 பிணை வைக்கக் கோரினார். ஆனால், அரசு தரப்பில் RM15,000 பிணை பரிந்துரை செய்யப்பட்டது.

நீதிபதி நோர்ஷிலா காமருடின், RM8,000 பிணைத் தொகை மற்றும் ஒரு உறுதிமொழியுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். சந்தேகநபரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆவணச் சமர்ப்பிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here