நீதி கிடைக்கட்டும் , நியாயம் நிலைக்கட்டும்!

ஆர்சிஐ அமைக்கப்படட்டும்!

போலீஸ் தடுப்புக்காவல் திடீர் மரணங்களைத் தடுப்பதற்கு சட்டங்களும் எஸ்ஓபி எனப்படும் நிரந்தரச் செயல்பாட்டு வரைமுறைகளும் போதுமானதாக இல்லை. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

உமார் ஃபாருக் என்ற ஹேமநாதன் (வயது 36) போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மாடியில் இருந்து குதித்து மாண்டார். இதற்கு சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனாய்டி முகம்மட் போலீஸ் தரப்பு நியாயங்களை முன்வைத்திருக்கிறார்.

போலீஸ் தரப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் சொல்லும் விளக்கம் அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாக இருக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லை.

இச்சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் குற்றப் புலன்விசாரணைப் பிரிவு அதன் புலன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. உமார் ஃபாருக் மீதான குற்றச்செயல் புலன் விசாரணைக்குப் பொறுப்பேற்றிருந்த போலீஸ் அதிகாரி இந்த விசாரணை முடியும் வரை வேறு ஒரு போலீஸ் நிலையத்திற்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கேஸ் தோம்புகள் திருட்டுத் தொடர்பில் 2021, ஜூன் 2ஆம் தேதி உமார் ஃபாருக் கைதுசெய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புலன்விசாரணைக்காக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். போலீஸ் லோக்கப்பில் அடைக்கப்படுவதற்கு முன் போலீஸ்காரர்களின் பிடியில் இருந்து நழுவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து கார் பார்க்கில் விழுந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணமுற்றார்.

இது போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட தகவல். அப்படி அல்ல… இப்படித்தான் என்று இதனை மறுக்கும் நோக்கம் நமக்கு அல்ல. ஆனால், உண்மையில் என்னதான் நடந்தது? உமார் ஃபாருக் தற்கொலைதான் செய்துகொண்டாரா? இக்கேள்விகளுக்குச் சரியான – தெளிவான பதிலை எதிர்பார்ப்பதில் தவறு இருக்க முடியாதே!

உமார் கைதுசெய்யப்பட்ட நேரத்தில் இருந்து போலீஸ் பிடியில் இருந்து நழுவி மேல்மாடியில் இருந்து குதித்து மரணம் அடைந்தது வரை – இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? சம்பவக் கோர்வைகள் வரிசபை்படுத்தப்படுமா?

தற்கொலை செய்துகொள்வதற்காக உமார் குதித்திருக்க முடியாது என்ற அனுமானமும் எழுந்துள்ளதைத் தவிர்க்க இயலவில்லை. லோக்காப்பில் அடைக்கப்பட்ட பின்னர் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட பதற்றமா?

பயத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடிக்கும் நோக்கத்தில் அவ்வாறு செய்திருப்பாரா? கைதுசெய்த போலீஸ்காரர்களால் அவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டாரா? உடலில் காணப்பட்ட காயங்கள் அனைத்தும் மேல்மாடியில் இருந்து கீழே குதித்ததால் ஏற்பட்டதா?

விசாரிக்கும்போது தாக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டிருக்குமாயின் கீழே குதித்ததால் ஏற்பட்ட காயங்களால் தான் அவர் மாண்டார் என்று மொட்டையாக முடித்துக்கொள்ளலாமா?

உமாரின் முகத்தில் மற்றும் உடலில் காணப்பட்ட காயங்கள் இந்தத் திடீர் மரணத்திற்குக் காரணமாக இருக்குமா? உண்மையில் சொல்லப் போனால் உமாரின் திடீர் மரணம் சற்று வினோதமாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் அவர் கைதுசெய்யப்பட்ட விதம் சில சந்தேகங்களை எழுப்பவே செய்கின்றன. ஐந்து போலீஸ் அதிகாரிகள் வீட்டினுள் நுழைந்து உமாரை இழுத்துச் சென்றனர் என்று அவரது மனைவி ஹுமாய்ரா அப்துல்லா என்ற கண்ணகி கூறியிருப்பது இச்சந்தேகத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

இச்சம்பவம் மீதான புலன் விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்பதையும் நாம் அனுமானிக்க வேண்டாம். இருப்பினும் நீதி கிடைப்பது உறுதி  செய்யப்படட்டும்.

போலீஸ் தரப்பில் ஒளிவுமறைவு அற்ற புலன்விசாரணை நடத்தப்பட்டால் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை மலரும். போலீசே போலீசாரை புலன்விசாரணை செய்யாமல் போலீஸ் தடுப்புக்காவல் மரணங்களை அரச மலேசிய விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) விசாரித்தால் இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும்.

நாட்டில் வாழும் இந்தியர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. ஆர்சிஐ அமைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டவே கூடாது!

பி.ஆர்.ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here