கை கொடுப்போம் , நோயெதிர்ப்புக்கு வழிவகுப்போம்!

 

கோவிட்-19 தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு தனியார் துறைப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தப் புனித உன்னதத் திட்டத்திற்கு முடிந்த அளவில் இவர்கள் தந்து உதவலாம்.

நாட்டின் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த இத்திட்டத்திற்கு அரசாங்க ஊழியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களுக்குத் தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தனியார்துறை ஊழியர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். அவர்களின் ஆதரவு குறிப்பிடத்தக்க, ஆக்கப்பூர்வத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் நாம் செய்யும் மிகப்பெரிய  தியாகமாகவே இந்தத் தானம் கருதப்பட வேண்டும். மலேசியர்களாக நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக்காட்டும் தருணம் இது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினை சாதாரணமானது அல்ல. கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் போரிடுவது என்பது காற்றுடன் மோதுவதற்குச் சமமானது ஆகும்.

மிகக்கொடிய இத்தொற்றின் கோரப்பிடியில் இருந்து நாம் முற்றாக விடுபட வேண்டும். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இழந்த மகிழ்ச்சிகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

அரசாங்கத்தால் மட்டும், தனி மனிதனால் மட்டும் இது சாத்தியமாகாது. ஒட்டுமொத்த மக்களும் கரம்கொடுத்து ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்தக் கொரோனா தொற்றைக் குழிதோண்டிப் புதைக்க முடியும்.

அரசாங்கத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 8 லட்சம் பணியாளர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களின் மாதாந்திர அலவன்ஸ் தொகையில் இருந்து ஒரு பங்கை தானம் செய்வர்.

இதில் இருந்து கிடைக்கப்பெறும் பணமானது கோவிட்-19 தடுப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும்.  ஏ கிரேட் பணியாளர்கள் அவர்களின் மாத அலவன்ஸ் தொகையில் இருந்து 50 விழுக்காட்டை நன்கொடையாக வழங்குவர்.

அதேபோல் பி,சி கிரேட் பிரிவில் வேலை செய்கின்றவர்கள் முறையே 20 ,  10 விழுக்காட்டைத் தானம் செய்வர். கிரேட் 44 முதல் 56 வரையிலான பணியாளர்கள் 5 விழுக்காட்டுத் தொகையை நன்கொடையாகக் கொடுப்பர்.

கிரேட் 29 முதல் 41 வரையிலான பிரிவில் பணிசெய்கின்ற அரசு ஊழியர்கள் மாதம் ஒன்றுக்குத் தலா 10 வெள்ளி வழங்குவர். கிரேட் 1 முதல் 28 வரையிலான பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மூலம் கிடைக்கப் பெறும் மொத்தப் பங்களிப்பு 3 கோடி வெள்ளி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கோவிட்-19 தேசியப் பேரிடர் நிவாரண நிதி கணக்கில் சேர்க்கப்படும் இந்நிதி முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

அதன் செலவுகளில் வெளிப்படைத்தன்மையும் துல்லியமும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். சந்தேகங்களுக்கும் ஐயங்களுக்கும் இடமளிக்கவே கூடாது.

தனியார்துறை பணியாளர்களைப் பொறுத்தவரை இந்த நன்கொடை விரும்பிக் கொடுக்கப்படுவதாக இருக்க வேண்டும். கட்டாயம் – பலவந்தம் கூடாது.

அரசாங்கத் தரப்பைப் பொறுத்தவரை அதன் ஊழியர்களின் வருமானத்திற்கு அரசாங்க உத்தரவாதம் உள்ளது. ஆனால், தனியார்துறைப் பணியாளர்கள் வருமானம் இழப்பு, பணி இழப்பு, சம்பள வெட்டு என்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மறுப்பதற்கில்லை.

இருப்பினும் மலேசியா நம் நாடு. அதில் வாழ்கின்றவர்கள் நம் மக்கள் என்ற உணர்வோடு முடிந்ததை வழங்குவோம். மலேசியர்கள் பொதுவாகவே – இயல்பாகவே இரக்க குணம் நிறைந்தவர்கள்.

இந்த உணர்வோடு தனியார் துறை பணியாளர்களும் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளிக் கொடுப்பார்கள் என்ற உணர்வே விஞ்சி நிற்கிறது!

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here