பெர்கேசோ 3.0 சம்பள மானிய உதவித் திட்டம்

 ஜூலை வரை    நீட்டிப்பு!

கோலாலம்பூர்
மத்திய அரசாங்கத்தின் கூடுதல் உதவித் திட்டத்தின் கீழ் சம்பள மானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை மலேசிய மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கேசோ வரவேற்றது.

2021, ஜூன் 1 தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொருளாதாரத் துறைகளுக்கும் கூடுதலாக ஒரு மாதச் சம்பள மானியத்தை அரசாங்கம் நீட்டித்திருக்கிறது.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அண்மையில் பெமெர்க்காசா எனப்படும் மக்கள் ,  பொருளாதார கூடுதல் உதவி வியூகத் திட்டத்தை அறிவித்தார். இப்பரிவுத் திட்டத்தில் சம்பள மானியம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பள மானிய உதவித்திட்டம் (3.0) நீட்டிக்கப்பட்டிருப்பதன் மூலம் தொழிலாளர்கள் வேலை இழப்பது, வருமானம் இழப்பது போன்ற அபாயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் நிறுவனங்கள் மூடப்படுவதும் தடுக்கப்பட்டிருக்கிறது என்று பெர்கேசோ தலைமை மேலாண்மை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் பின் டத்தோ அஸிஸ் முகம்மட் தெரிவித்தார்.

முதலாளிகள், தொழிலாளிகளின் துன்பங்களை, துயரங்களைக் கேட்டும் புரிந்தும் மத்திய அரசாங்கம் இந்த சம்பள மானிய உதவித் திட்டத்தை அறிவித்திருப்பதானது அதன் பரிவுக்குச் சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பள உதவி மானியத் திட்டத்திற்கு அரசாங்கம் 150 கோடி வெள்ளியை ஒதுக்கி இருக்கிறது. பெர்கேசோவிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 500 தொழிலாளர்கள் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுமையிலும் உள்ள 220,000 நிறுவனங்களைச்சேர்ந்த 25 லட்சம் தொழிலாளர்கள் இதில் பயன்பெறுவர்.

இந்நிலையில் சம்பள மானிய உதவித் திட்டத்திற்கான (3.0) விண்ணப்ப தேதியை பெர்கேசோ 2021 ஜூன் 30ஆம் தேதியில் இருந்து 2021 ஜூலை 31ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது என்று டத்தோஸ்ரீ முகம்மட் அஸ்மான் குறிப்பிட்டார்.

\மேலும் நிறுவனங்களுக்கான இந்தச் சம்பள மானிய உதவித் திட்டமானது இயல்பாகவே நீட்டிக்கப்படும். முதலாளிகள் செய்ய வேண்டியது எல்லாம் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் அவர்களின் தொழிலாளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டியது மட்டுமே.

ஒன்றாவது, இரண்டாவது சம்பள மானிய உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள், 3.0 திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2020 ஏப்ரல் 1ஆம் தேதி இந்தச் சம்பள மானிய உதவித் திட்டத்தை பெர்கேசோ அமல்படுத்தியது. கோவிட்-19 காலகட்டத்தில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (எம்சிஓ 1.0) தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தொழிலாளர்கள் வருமான இழப்பை எதிர்நோக்கக் கூடாது. சம்பளம் கொடுக்க முடியாமல் வேலையில் இருந்து நிறுத்தப்படுவதைத் தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக மத்திய அரசாங்கம் இந்தச் சம்பள மானிய உதவித் திட்டத்தை அறிவித்தது.

மாதம் ஒன்றுக்கு 4,000 வெள்ளி அல்லது அதற்குக் குறைவான சம்பளம் வாங்கும் தொழிலாளிகளுக்கு இந்தச் சம்பள மானிய உதவித் தொகைக்கு முதலாளி தரப்பினர் விண்ணப்பிக்கலாம்.

2021, மே 30ஆம் தேதி வரை 330,586 விண்ணப்பங்களை பெர்கேசோ அங்கீகரித்தது. மொத்தம் 27 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்றனர். மொத்தம் 15.04 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ முகம்மட் அஸ்மான் தெரிவித்தார்.

3.0 சம்பள மானிய உதவித் திட்டம் தொடர்பில் மேலதிக விளக்கம்  தகவல் பெற விரும்புவோர் பெர்கேசோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.perkeso.gov.my வலம் வரலாம். அல்லது Careline Perkeso 1-300-22-8000 என்ற எண்ணில் அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here