எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

 குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; 

கொரோனா காலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் மாற்றியுள்ளது. தொற்று, மருத்துவமனை, உயிரிழப்புகள் என்ற நேரடி பிரச்னைகள் மட்டுமின்றி மறைமுகமாகவும் கொரோனா பல இடர்பாடுகளை உண்டாக்கியுள்ளது. கொரோனாவால் போடப்படும் ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், வருடக்கணக்கில் பள்ளிகள் மூடிக்கிடப்பதும், அதனால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதும் என ஒரு சங்கிலித் தொடர்பாக கொரோனாவின் தாக்கம் தொடர்கிறது. அந்த வகையில் கொரோனாவால் தலைதூக்கியுள்ள மற்றொரு பிரச்னை குழந்தை தொழிலாளர்கள்.

கொரோனா இல்லாத காலத்திலேயே குழந்தை தொழிலாளர்கள் உருவாகி வந்த நிலையில் கொரோனா காலம் அந்த பிரச்னைக்கு தீனி போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இப்போது குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது.

எல்லாம் கொரோனாவால் தான். 10 குழந்தைகளில் ஒரு குழந்தை , தொழிலாளராக இருப்பதாக இடியை இறக்குகிறது புள்ளி விவரம். 2016ம் ஆண்டு152 மில்லியனாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் இப்போது 160 மில்லியனாக அதிகரித்துள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்காவில் அதிகரிக்கும் மக்கள் தொகை, வறுமை போன்றவை அங்கு குழந்தை தொழிலாளர்களை அதிகம் உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள யுனிசெஃப், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான போரில் களம் இறங்க வேண்டும். கொரொனா காலக்கட்டதால் ஊரடங்கு தொடர்கிறது. இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களும், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதும் குழந்தைகளை வேலையை நோக்கி தள்ளுகின்றன. வேறு வழியின்றி குடும்பத்தினரே குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்கிறது.

இதில் மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கொரொனா காலத்து பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்ய குழந்தைகள் அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியம் விரைவில் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கிறது யூஎன். 5-11 வயதிலான குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டேட்டா தெரிவிக்கிறது.

குழந்தை தொழிலாளர்கள் குறித்து பேசிய யுனிசெஃபின் நிர்வாகி ஒருவர், நாம் என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்ற முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். குழந்தை தொழிலாளர் பிரச்னையை அடித்து நொறுக்க நாம் மிகுந்த ஆற்றலுடன் செயலாற்ற வேண்டிய நேரம் இது. ஒரு எச்சரிக்கை மணி நமக்கு அடிக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்த்து நிற்கவில்லை என்றால் எதிர்கால சந்ததி துயரத்தில் சிக்கிவிடும் என்றார்.

குழந்தை தொழிலாளர்கள் போலவே குழந்தை திருமணமும் கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதும், பொருளாதார நெருக்கடியுமே குழந்தைகள் மீதான பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

கொரோனா காலத்தில் செலவின்றி திருமணம் செய்துவிடலாம் என்ற திட்டமும் குழந்தை திருமணம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் என கொரோனா மறைமுகமாக எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here