இஸ்ரேலின் புதிய பிரதமர் ஆகிறார் நப்தாலி பென்னட்.

ஜெருசலம்: இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.

இதனால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக உருவாக்கியது. இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரி கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை முன்னாள் மந்திரியான நஃப்தாலி பென்னெட் இடம்பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் யெய்ர் லாப்பிட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது.

இதன் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக யாமினா கட்சி தலைவரும் பாதுகாப்புத்துறை முன்னாள் மந்திரியான நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தாலி பென்னெட்டிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னெட் 2 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதன் பின்னர் ஆட்சியின் மீதமுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யேஷ் அதித் கட்சியின் தலைவரான யெய்ர் லாப்பிட் இஸ்ரேலின் பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here