ஆராய்ச்சிக் குழுத் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் எச்சரிக்கை
விஞ்ஞானிகள் சூழல்களின் முன்னோடிகள். அவர்களின் கூற்று நிராகரிக்கபடக்கூடாது. அதிலும் சுற்றுச்சூழல் குறித்தவற்றில் அலட்சியம் அறவே கூடாது.
துருவங்களில் பனி உருகுகிறதென்றால் வெப்பம் மிகக் கடுமையாகி வருகிறது என்பதற்கு விளக்கம் தேவையே இல்லை.
கோடைக்காலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய பனிக்கட்டிப் பாளங்கள் இப்போது மறைந்துள்ளது. இது பனி உருகுவதன் முதல் அடையாளமாகும்.
புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகும் அபாயம் குறித்து ஏற்கெனவே சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூழலில், இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ், தற்போது பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பனிப்பாறைகள் அடங்கிய சுரங்கப் பகுதியின் முனைகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் காலம் அதிக தூரத்தில் இல்லை.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் வடதுருவத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகள் பேராசிரியர் ரெக்ஸ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இக்குழுவினர் இப்பகுதியில் 389 நாள்கள் ஆராய்ச்சி செய்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஜெர்மனி திரும்பினர். இன்னும் சில ஆண்டுகளில் பனிப் பாறைகள் இல்லாத ஆர்க்டிக் கடல் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரெக்ஸ் குறிப் பிட்டுள்ளார்.
இக்குழுவினர் தங்களது ஆராய்ச்சியின் முதல் அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளனர். 2020- ஆம் ஆண்டு குளிர்காலத்தில் இருந்த சூழலைவிட தற்போது சூழல் மாறியுள்ளதாகவும், பனிப் பாளங்கள் ஆர்க்டிக் கடல் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவைக் காட்டிலும் பாதியளவு குறைந்து உருகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உருகுவதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கை தேவை என்பது குறித்தும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.









