ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் சனிக்கிழமையன்று கோவிட் தொற்றுநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்ததால், அதிபர் ஜெய்ர் போல்சனரோவின் தொற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் கோவிட் தொற்றுநோய் மரணங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆரம்ப வாய்ப்புகளை அதிபர் ஜெய்ர் போல்சனரோ பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பைசர் நிறுவனம் தடுப்பூசிகளை விற்பதற்கு அரசை அணுகியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்தது சர்ச்சைக்கு வித்திட்டது.
இந்நிலையில் 5 லட்சம் கோவிட் மரணங்கள் என்பது மக்கள் மீது அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையின் ஒரு வடிவம் என கூறி போராட்டம் செய்கின்றனர். நாட்டின் தலைநகர் பிரேசிலியா உட்பட 26 மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. அதிபர் போல்சனரோவை பதவி நீக்கக்கோரி டிரம்ஸ்களை இசைத்து, கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக மே 29 அன்றும் பிரேசில் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. ஒரு சிறப்பு செனட் குழு போல்சனாரோவின் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது. தடுப்பூசிகளை காட்டிலும், நிரூபிக்கப்படாத சிகிச்சைகளுக்கு தான் அவரது நிர்வாகம் முக்கியத்துவம் அளித்ததாக அக்குழு கூறியுள்ளது.

சுமார் 21 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் இதுவரை சுமார் 2 கோடி மக்கள் மட்டுமே முழு தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர். 29% பேர் முதல் தடுப்பூசி அளவை மட்டும் பெற்றுள்ளனர். தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். இது போன்ற பிரச்னைகளால் அந்நாட்டு அதிபரின் செல்வாக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கருத்துக் கணிப்பில் 24% பிரேசிலியர்கள் மட்டுமே அவரது நிர்வாகம் சிறந்தது என கூறினர். அதே கருத்துக் கணிப்பில், இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இன்று தேர்தல் வைத்தாலும் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.









